சச்சினின் அந்த சாதனையை விராட் கோலியால் உடைக்க முடியாது - பிரைன் லாரா


சச்சினின் அந்த சாதனையை விராட் கோலியால் உடைக்க முடியாது - பிரைன் லாரா
x
தினத்தந்தி 7 Dec 2023 6:56 PM IST (Updated: 7 Dec 2023 6:57 PM IST)
t-max-icont-min-icon

20 சதங்களை நிறைய வீரர்கள் தங்களுடைய வாழ்நாளில் கூட அடித்ததில்லை.

புதுடெல்லி,

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சின் தெண்டுல்கரின் சாதனையை உடைத்துள்ள அவர் நடைபெற்று முடிந்த 2023 உலகக்கோப்பையில் 765 ரன்கள் விளாசி ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற மற்றுமொரு சாதனையை உடைத்தார். அது போக ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை (49) முந்தி 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையும் விராட் கோலி படைத்துள்ளார்.

அந்த வகையில் யாராலும் முறியடிக்க முடியாமல் இருக்கும் சச்சின் தெண்டுல்கரின் 100 சதங்கள் உலக சாதனையை விரைவில் கோலி முறியடிப்பார் என்று ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சச்சினின் 100 சதங்கள் சாதனையை உடைக்க வாய்ப்பிருந்தாலும் அதை விராட் கோலி சாதித்து காட்டுவது மிகவும் கடினம் என்று பிரைன் லாரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "விராட் கோலி தற்போது 35 வயது நிரம்பியுள்ளார். 80 சதங்கள் அடித்துள்ள அவருக்கு இன்னும் 20 தேவைப்படுகிறது. ஒருவேளை ஒவ்வொரு வருடமும் 5 சதங்கள் அடித்தால் கூட சச்சின் சாதனையை சமன் செய்வதற்கு அவருக்கு இன்னும் 4 வருடங்கள் தேவைப்படும். அதனால் இந்த சாதனையை முறியடிப்பது கொஞ்சம் கடினம்தான்.

ஏனெனில் 20 சதங்கள் அடிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும். 20 சதங்களை நிறைய வீரர்கள் தங்களுடைய வாழ்நாளில் கூட அடித்ததில்லை. எனவே விராட் கோலி அதை கண்டிப்பாக செய்வார் என்று நான் சொல்ல மாட்டேன். காரணம் உங்களுடைய வயது எப்போதும் எதற்காகவும் நிற்காது. எனவே விராட் கோலி நிறைய சாதனைகளை உடைத்தாலும் 100 சதங்கள் சாதனையை உடைப்பது கடினமாக இருக்கும் " என்று கூறினார்.


Next Story