விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: சத்தீஸ்கர் அணியை வீழ்த்தி தமிழக அணி வெற்றி
இன்று நடந்த 'சி' பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு- சத்தீஸ்கர் அணிகள் மோதின.
பெங்களூரு,
38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டி டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, ராஞ்சி ஆகிய நகரங்களில் நடக்கிறது. டிசம்பர் 2-ந் தேதி வரை நடைபெறும் இந்த தொடரின் நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொண்டுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் பெங்களூரு அருகே ஆலூரில் இன்று நடந்த 'சி' பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு- சத்தீஸ்கர் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்தது.
தமிழக அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்சன் (121 ரன்கள்) - நாராயண் ஜெகதீசன் (107 ரன்கள்) இருவரும் சதம் அடித்து அசத்தினர். பின்வரிசையில் பாபா அப்ரஜித் 19 பந்துகளில் 36 ரன்கள் குவித்து மிரட்டினார்.
இதை தொடர்ந்து 341 ரன்கள் இலக்குடன் சத்தீஸ்கர் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் சோபிக்க தவறினாலும் ஹர்ப்ரீத் சிங்- அமன்தீப் காரே இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். மற்ற வீரர்கள் கைகொடுக்காத நிலையில் 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்களை இழந்து 326 ரன்கள் அடித்து போராடி தோல்வி அடைந்தது. இதன் மூலம் தமிழக அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.