ஓவர் வெயிட்டால் ஓட முடியவில்லை.. ரன்-அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ் வீரர்..! வைரலாகும் வீடியோ
அவர் தனது உடல் எடையை குறைத்து ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பலரும் ஆலோசனைகளை வழங்கிவருகின்றனர்.
கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ், பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் ஆடிய செயின்ட் லூசியா கிங்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பார்படாஸ் ராயல்ஸ் அணி, 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இப்போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய ரக்கீம் கார்ன்வால் முதல் பந்திலேயே, ஓட முடியாமல் ரன் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அவர் மிகவும் குண்டாக இருப்பதால் அவரால் சிங்கிள் ரன் கூட ஓடி எடுக்க முடியவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தனது உடல் எடையை குறைத்து ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பலரும் ஆலோசனைகளை வழங்கிவருகின்றனர்.
வெயிட்டான வீரர் என்று அழைக்கப்படும் ரக்கீம் கார்ன்வால், ஆடுகளத்திற்கு வரும்போதெல்லாம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். போட்டிகளில் சொதப்பும்போதெல்லாம் ரசிகர்களின் பேசுபொருளாக ஆகிறார். வெஸ்ட் இண்டீஸ் தேசிய அணியில் ஆல்-ரவுண்டராக இருக்கும் கார்ன்வால், உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்காக சரியான விகிதத்தில் சாப்பிட்டாலும், ஆடுகளத்தில் சமாளிக்க முடியாமல் போராடுவதை காண முடிகிறது.
இதுபற்றி கார்ன்வால் கூறுகையில், ''நான் குண்டான நபர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உடலை குறைக்க நான் இன்னும் பயிற்சி செய்ய வேண்டும். அதுதான் எனது கவலையாக உள்ளது. அதேசமயம் நான் சோம்பேறி இல்லை. உடற்தகுதிக்காக அதிக நேரம் செலவிடுகிறேன்" என்றார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சில போட்டிகளில் அற்புதமாக பந்து வீசி ரசிகர்களின் கவனம் பெற்ற கார்ன்வால், நேற்றைய ஆட்டத்தில் பந்துவீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.