ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி...கே.எல்.ராகுலை பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்...!


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி...கே.எல்.ராகுலை பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள்  வீரர்...!
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கராச்சி,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. 200 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்தியா 2 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து 4வது விக்கெட்டுக்கு இணைந்த கோலி, ராகுல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இதில் கோலி 85 ரன் எடுத்து அவுட் ஆகினார்.

இறுதி வரை களத்தில் நின்ற ராகுல் 97 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். இந்நிலையில் இந்திய அணி பெற்ற வெற்றியை பாராட்டி பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் தனது எக்ஸ் வலைத்தளபக்கத்தில் 'ஒரு போட்டியில் நீங்கள் இவ்வாறு தான் கம்பேக் கொடுக்க வேண்டும். வாவ்' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், கே.எல்.ராகுல் விளையாடிய விதம் அவர் வேறொரு இடத்தில் விளையாடுவது போல் இருந்தது எனவும் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது,

கே.எல்.ராகுல் விளையாடிய விதம் அவர் வேறொரு இடத்தில் விளையாடுவது போல் இருந்தது. விராட் கோலியும் சிறந்த இன்னிங்ஸ் விளையாடினார். ஆனால் அவரால் வாய்ப்பு கொடுக்காமல் விளையாட முடியவில்லை. மறுபுறம் கே.எல்.ராகுல் தன்னுடைய இன்னிங்ஸ் முழுவதும் எதிரணிக்கு எவ்விதமான வாய்ப்பும் கொடுக்காமல் விளையாடினார். மேலும் தேவைப்படும் போதெல்லாம் சிறந்த ஷாட்களை அடித்த அவர் அழுத்தத்தை முற்றிலுமாக உடைத்தார்.

அதே சமயம் விராட் கோலியின் கேட்ச்சை ஆஸ்திரேலியா தவற விட்டது போட்டியின் திருப்பு முனை என்றாலும், ராகுலின் நிலைத்தன்மை முக்கியமாக இருந்தது. மேலும் அவரை நீங்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் விளையாட வைக்கலாம்.

அது போக 50 ஓவர்கள் அவர் விக்கெட் கீப்பிங் செய்ததையும் மறந்து விடாதீர்கள். எப்போதும் வேகமாக ஓடுவதற்காக விராட் கோலியின் பிட்னஸை அனைவரும் பாராட்டுகின்றனர். ஆனால் அவருக்கு நிகரான வேகத்தில் ஓடி விக்கெட் கீப்பிங்கிலும் அசத்திய ராகுல் இன்னும் அதிகமாக பேசப்பட வேண்டும். மொத்தத்தில் முழுமையான வீரரான அவருக்கு இன்னும் அதிக ஆதரவு கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story