டி.என்.பி.எல். 2-வது தகுதி சுற்று: நெல்லையை வீழ்த்தி கோவை திரில் வெற்றி...!


டி.என்.பி.எல். 2-வது தகுதி சுற்று: நெல்லையை வீழ்த்தி கோவை திரில் வெற்றி...!
x

கேப்டன் ஷாருக்கான் பந்தை விளாசியக் காட்சி

டி.என்.பி.எல். 2-வது தகுதி சுற்றில் கடைசி பந்தில் நெல்லையை வீழ்த்தி கோவை அணி திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கோவை,

6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இந்தநிலையில் கோவையில் இன்று நடந்த இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும், ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்சும் மோதின. லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த நெல்லை அணி முதலாவது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீசிடம் தோல்வி அடைந்தது. இருப்பினும் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களுக்குள் வந்ததால் அந்த அணிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்தது. நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சஞ்சய் யாதவ் 26 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்ரீ நிரஞ்சன் 34 ரன்களும், சூரியபிரகாஷ் 25 ரன்களும்,இறுதியில் அஜிதேஷ் அதிரடி காட்டி 38 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி பேட்டிங் செய்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்கள் கங்கா ஸ்ரீதர் ராஜூ (28 ரன்கள்), சுரேஷ்குமார் (21 ரன்கள்) அவுட் ஆகி வெளியேறினர். தொடர்ந்து சிஜித் சந்திரன் (3 ரன்கள்) வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.

இதனை தொடர்ந்து சாய் சுதர்சன், ஷாருக்கான் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் நெல்லை அணியின் பந்து வீச்சை விளாசி அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர். நன்றாக விளையாடிய சாய் சுதர்சன் 31 பந்துகளில் அரை சதம் எடுத்தார். இந்த ஜோடி 27 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் கார்த்திக் மணிகண்டன் பந்து வீச்சில் சாய் சுதர்சன் 53 ரன்கள் (33 பந்துகள், 5 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆனார்.

தொடர்ந்து முகிலேஷ் (6 ரன்கள்) வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த அபிஷேக் தன்வர் 23 ரன்கள் (9 ப ந்துகள், 2 பவுண்டரி, 2 சிக்சர்), திவாகர் (6 ரன்கள்) என அடுத்தடுத்து விக்கெட்டுகள் பறிபோனது. இருப்பினும் அந்த அணியின் கேப்டன் ஷாருக்கான் சிறப்பாக விளையாடி 22 பந்துகளில் அரை சதம் கடந்தார். முடிவில் கோவை அணி 20 ஓவர்களில் 8 வி க்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது. அந்த அணியின் கேப்டனர் ஷாருக்கான் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 58 ரன்கள் (24 பந்துகள், 4 பவுண்டரிகள், 5 சிக்சர்) எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

நெல்லை அணியின் பவுலர்கள் கார்த்திக் மணிகண்டன் 3 வி க்கெட்டுகள், பாபா அபராஜித் 2 விக்கெட்டுகள், ஈஸ்வரன் 2 வி க்கெட்டுகள், ஸ்ரீ நிரஞ்சன் 1 விக்கெட் எடுத்தனர். கோவை அணியின் வெற்றியை தொடர்ந்து கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொள்கிறது.


Next Story