ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் அந்த இரண்டும் மிகப்பெரிய தொடர்களாகும் - நிக் ஹாக்லி


ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் அந்த இரண்டும் மிகப்பெரிய தொடர்களாகும் - நிக் ஹாக்லி
x

image courtesy: AFP

ஆஷஸ் தொடருக்கு சமமாக பார்டர் - கவாஸ்கர் கோப்பை ரசிகர்களை ஈர்ப்பதாக நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர் - கவாஸ்கர் தொடர்) ஆட உள்ளது. பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்த முறை 5 ஆட்டங்கள் கொண்ட தொடராக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த தொடரின் முதல் ஆட்டம் பெர்த்தில் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. 2வது போட்டியான பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. 3வது போட்டி டிசம்பர் 14ம் தேதி பிரிஸ்பேன் மைதானத்திலும், 4வது போட்டியான பாக்ஸிங் டே டெஸ்ட் டிசம்பர் 26ம் தேதி மெல்போர்ன் மைதானத்திலும், 5வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி சிட்னி மைதானத்திலும் தொடங்குகிறது.

இந்நிலையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆஷஸ் தொடருக்கு சமமாக தங்கள் நாட்டில் நடைபெறும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை ரசிகர்களை ஈர்ப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய இயக்குனர் நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார். அதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரால் தங்களுக்கு 6 மடங்கு வருமானம் அதிகரித்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஆஸ்திரேலிய கிரிக்கெட் காலண்டரில் பார்டர் கவாஸ்கர் கோப்பை மற்றும் ஆஷஸ் மிகப் பெரிய தொடர்களாகும். அது பெரும்பாலும் வணிக ரீதியில் ஒப்பிடத்தக்கவை. 2018/19 பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை விட தற்போதைய தொடருக்கு இந்தியாவிலிருந்து 6 மடங்கு டிக்கெட் விற்பனை அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒவ்வொரு புகழ்பெற்ற மைதானங்களில் தனித்துவமான பிட்ச் மற்றும் சூழ்நிலைகள் இருக்கும். அதுவே அந்தத் தொடரை மிகவும் ஆர்வம் மிகுந்ததாக மாற்றுகிறது. அதில் ரசிகர்களை மேலும் ஈர்ப்பதற்காக பகல் இரவு டெஸ்ட் போட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்" என்று கூறியுள்ளார்.


Next Story