இந்தியாவிடம் இருந்து எங்களுக்கு வேண்டியது இதுதான் - பாக்.முன்னாள் வீரர்
பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை இந்தியா வழங்க வேண்டியதில்லை கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.
லாகூர்,
2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. ஆனால் இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இரு நாட்டு அணிகளும் ஆசிய மற்றும் ஐ.சி.சி தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருகின்றன.
மேலும் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் அப்போது பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோல 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபாய் அல்லது இலங்கைக்கு மாற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) பி.சி.சி.ஐ கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது குறித்து ஐ.சி.சி இன்னும் முடிவு செய்யவில்லை.
மறுபுறம் இந்தியா வரவில்லை என்றால் அவர்களைப் புறக்கணித்து விட்டு மற்ற அணிகளை வைத்து சாம்பியன்ஸ் டிராபியை தங்களது நாட்டிலேயே நடத்த பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது.
ஆனால் அரசியலையும் விளையாட்டையும் ஒன்றாக கலக்காமல் தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடுமாறு இந்தியாவிற்கு தொடர்ந்து பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை இந்தியா வழங்க வேண்டியதில்லை என்று முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார். இருப்பினும் இருதரப்பு தொடர்கள் மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி போன்ற தொடர்களில் தங்களுடன் இந்தியா விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "பிசிசிஐக்கு சொந்தமாக விதிமுறைகள் உள்ளன. ஒருவேளை இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே இருதரப்பு தொடர்கள் தொடங்கினால் ஐபிஎல் தொடரில் எங்களது வீரர்கள் விளையாடாத பிரச்சனையும் முடிவுக்கு வரும். ஒருவேளை நீங்கள் ஐபிஎல் தொடரில் எங்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை எனில் பரவாயில்லை. எங்களுக்கு அது தேவையில்லை. அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவும் இல்லை. எங்களிடம் சொந்தமாக பிஎஸ்எல் இருக்கிறது. அது ஐபிஎல் தொடருக்கு நிகராக முடியாது என்பது எனக்கு தெரியும்.
ஆனால் நாம் முதலில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவோம். ஏனெனில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் இருநாட்டு ரசிகர்களையும் ஒன்றிணைக்கும். அதனாலேயே அது மற்ற போட்டிகளை விட உயர்ந்ததாக கருதப்படுகிறது. நாங்கள் 2004, 2007, 2011 ஆகிய வருடங்களில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம். அந்தத் தொடர்களில் நானும் இருந்ததற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அதே போல தற்போது எங்கள் நாட்டுக்கு வந்து இந்தியா விளையாட வேண்டும். நாங்களும் தொடர்ந்து இந்தியாவுக்கு சென்று விளையாடுவோம்" என்று கூறினார்.