சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் செய்த தவறு இதுதான் - சுட்டிக் காண்பித்த யுவராஜ் சிங்
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அமெரிக்கா வெற்றி பெற்றது.
நியூயார்க்,
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 159 ரன்கள் அடித்தது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய அமெரிக்காவும் 159 ரன்கள் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.
இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 18 ரன்கள் அடித்தது. அதைத்தொடர்ந்து 19 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு எதிராக 13 ரன்கள் மட்டுமே கொடுத்த நேத்ராவல்கர் 1 விக்கெட்டை எடுத்து அமெரிக்காவை 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.
முன்னதாக இந்த சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் தரப்பில் இப்திகார் அகமது மற்றும் பகார் ஜமான் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் அதில் இப்திகார் அகமது ஸ்ட்ரைக்கை எடுத்து முதல் 3 பந்துகளில் 1 பவுண்டரி மட்டுமே அடித்து அவுட்டானார். அதைத் தொடர்ந்து வந்த ஷதாப் கான் கடைசி 3 பந்துகளை எதிர்கொண்டதால் பகார் ஜமானுக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பே கிடைக்கவில்லை.
இந்நிலையில் சூப்பர் ஓவரில் பகார் ஜமான் ஆரம்பத்திலேயே ஸ்ட்ரைக்கை எடுத்திருக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரரான யுவராஜ் சிங் பாகிஸ்தானின் தவறை சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:
"இடது கை வேகப்பந்து வீச்சாளர் பவுலிங் செய்தபோது பகார் ஜமான் ஏன் ஸ்ட்ரைக்கை எடுக்கவில்லை? என்பது எனக்கு புரியவில்லை. இடது கை பேட்ஸ்மேனாக இருந்தால் அந்த பவுலர் வீசும் கோணத்தில் எளிதாக அடித்திருக்கலாம். அமெரிக்க கேப்டன் மோனங்க் படேலின் முடிவை அந்த பவுலர் சாதுரியமாக மாற்றினார். தற்போது பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக பேட்டிங், பீல்டிங் செய்து கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இந்தியா வலுவான துவக்கத்தை பெற்றுள்ளதால் பாகிஸ்தான் வெற்றி பெறுவது கடினம்" என்று பதிவிட்டுள்ளார்.