பெங்களூரு அணி உரிமையை ஏலம் எடுத்தபோது மனதில் தோன்றியது இதுதான் - விஜய் மல்லையா


பெங்களூரு அணி உரிமையை ஏலம் எடுத்தபோது மனதில் தோன்றியது இதுதான் -  விஜய் மல்லையா
x

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு, அதன் முன்னாள் உரிமையாளரான விஜய் மல்லையா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லண்டன்,

நடப்பு ஐ.பி.எல். சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி 14 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 7 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்ற நிலையில், ரன்-ரேட் அடிப்படையில் சென்னை, டெல்லி, லக்னோ ஆகிய அணிகளை பின்னுக்கு தள்ளி விட்டு பிளே-ஆப் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.

இதுவரை கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி தனது முதல் 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தடுமாறியது. அதன்பின் எழுச்சி பெற்ற அந்த அணி தனது கடைசி 6 லீக் போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று 4-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

இதனையடுத்து பெங்களூரு இன்று நடைபெற உள்ள எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்நிலையில் பெங்களூரு அணிக்கு, அதன் முன்னாள் உரிமையாளரான விஜய் மல்லையா வாழ்த்து தெரிவித்துள்ளார். குறிப்பாக 2008 ஏலத்தில் வாங்கியபோதே விராட் கோலி ஆர்.சி.பி. அணிக்காக அசத்துவார் என்று தம்முடைய உள்ளுணர்வு தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

அந்த வகையில் இந்த வருடம் ஆர்.சி.பி. கோப்பையை வெல்லும் என்று தம்முடைய உள்ளுணர்வு சொல்வதாக தெரிவிக்கும் அவர் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "நான் ஆர்.சி.பி. உரிமையையும் விராட் கோலியையும் ஏலத்தில் எடுத்தபோது இதை விட சிறந்தவற்றை தேர்வு செய்திருக்க முடியாது என்று என் மனதில் தோன்றியது. தற்போது ஐ.பி.எல். கோப்பையை வெல்வதற்கு ஆர்சிபி அணிக்கு சிறந்த வாய்ப்புள்ளதாக என்னுடைய உள்ளுணர்வு சொல்கிறது. அதற்காக முன்னோக்கி செல்லுங்கள். அதற்கான சிறந்த அதிர்ஷ்டம் கிடைக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story