பிரித்வி ஷாவிற்கு அதிக வாய்ப்பு வழங்கப்படாததற்கு காரணம் இதுதான் - பிரவீன் ஆம்ரே


பிரித்வி ஷாவிற்கு அதிக வாய்ப்பு வழங்கப்படாததற்கு காரணம் இதுதான் - பிரவீன் ஆம்ரே
x

நடப்பு ஐ.பி.எல். சீசனில் பிரித்வி ஷாவிற்கு அதிக வாய்ப்பு வழங்கப்படாததற்கான காரணம் குறித்து டெல்லி அணியின் துணை பயிற்சியாளரான பிரவீன் ஆம்ரே கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நடப்பு ஐ.பி.எல். சீசனில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியாது லீக் சுற்றின் முடிவில் 14 புள்ளிகளுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. இந்த தொடரின் முதல் பாதியில் மோசமாக செயல்பட்ட டெல்லி அணியானது இரண்டாம் பாதியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசியில் 7 வெற்றிகளை பெற்றிருந்தாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றத்தை அளித்தது.

இந்த தொடரில் டெல்லி அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா 8 போட்டிகளில் விளையாடி 185 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்படவில்லை. அதனால் அவருக்கு வாய்ப்பு வழங்காத டெல்லி நிர்வாகம் 22 வயதாகும் ஆஸ்திரேலிய வீரர் ஜேக் பிரேசர்-மெக்குர்க்கை ஓப்பனங்கில் களமிறக்கியது. அந்த வகையில் இந்த வருடமும் பிரிதிவி ஷா சுமாராக செயல்பட்டு கம்பேக் கொடுக்க தவறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள டெல்லி அணியின் துணை பயிற்சியாளரான பிரவீன் ஆம்ரே கூறுகையில், " டெல்லி அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களில் பிரித்வி ஷாவும் ஒருவர். கடைசியாக நாங்கள் விளையாடிய 5 போட்டிகளில் நான்கு போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்கு காரணம் அவர் பாமில் இல்லை என்பது மட்டும்தான். ஏனெனில் பார்மில் இல்லை என்றால் எந்த ஒரு வீரருக்கும் அணியில் இடம் கிடைக்காது. டெல்லி அணி ஒட்டுமொத்தமாகவே இந்த தொடரில் சற்று சுமாரான ஆட்டத்தைதான் வெளிப்படுத்தி உள்ளது. சில வீரர்கள் சிறப்பாக விளையாடியிருந்தாலும் ஒரு சில வீரர்கள் ஏமாற்றம் அளிக்கும் வகையில் விளையாடினர். அந்த வகையில் பிரித்விஷாவும் ஒருவர்" என்று கூறினார்.


Next Story