சேப்பாக்கத்தில் எதிரணிகள் தடுமாற காரணம் இதுதான் - ஜடேஜா பேட்டி


சேப்பாக்கத்தில் எதிரணிகள் தடுமாற காரணம் இதுதான் - ஜடேஜா பேட்டி
x

Image Courtesy: Twitter 

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

சென்னை,

ஐ.பி.எல் தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி சென்னையின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த கொல்கத்தா 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் ஜடேஜா, தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 138 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 17.4 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 141 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக கெய்க்வாட் 67 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த பிட்ச்சில் நான் எப்போதும் என்னுடைய பவுலிங்கை மகிழ்ச்சியாக செய்கிறேன். குறிப்பாக சரியான இடத்தில் வீசினால் பந்து கொஞ்சம் நின்று செல்லும் என்று நம்பினேன். இது போன்ற ஆடுகளத்தில் எதிரணிகள் செட்டிலாகி திட்டமிடுவதற்கு நேரம் எடுத்துக் கொள்ளும்.

ஏனெனில் பொதுவாகவே அவர்கள் இங்கே 2 - 3 நாட்கள் மட்டுமே தயாராவதற்கான நேரத்தை பெறுவார்கள். எனவே எதிரணிகள் இங்கே வந்து பிட்ச் எப்படி இருக்கும் என்பதை கண்டறிந்து அதற்கு தகுந்தார் போல் விளையாடுவது கொஞ்சம் கடினமாகும். சேப்பாக்கத்தில் எதிரணிகள் தடுமாற காரணம் இதுதான். ஆனால் எங்களுக்கு இங்குள்ள சூழ்நிலைகள் நன்றாக தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story