வங்காளதேசத்திற்கு எதிரான தோல்விக்கு இதுதான் காரணம் - வனிந்து ஹசரங்கா
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
டல்லாஸ் ,
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் ஆடின.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக பதும் நிசாங்கா 47 ரன்கள் எடுத்தார்.
வங்காளதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி 19 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 125 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஹ்ரிடோய் 40 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக நுவான் துஷாரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் இலங்கை கேப்டன் வனிந்து ஹசரங்கா அளித்த பேட்டியில் கூறியதாவது,
8 முதல் 10 ஓவர்கள் வரை எங்களுடைய பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். அதன் பின்னர் இறுதிகட்ட ஓவர்களில் நாங்கள் மோசமாக பேட்டிங் செய்தோம். எங்களது பந்துவீச்சுதான் எங்களின் பலம் என்று எல்லோருக்கும் தெரியும். நாங்கள் பேட்டிங்கில் 150 முதல் 160 ரன்கள் எடுத்தால் எங்களது பந்துவீச்சை வைத்து எளிதாக வெற்றி பெற்றிருக்க முடியும்.
நாங்கள் இரண்டு போட்டிகளாக தொடர்ந்து தோல்வி அடைந்திருக்கிறோம். எங்கள் பிளேயிங் லெவனில் முக்கிய நான்கு பவுலர்களை மட்டும் வைத்திருக்கிறோம். முக்கிய நான்கு பவுலர்களும் அவர்களது வேலையை செய்கின்றனர். ஆனால் மீதமுள்ள நான்கு ஓவர்களை நாங்கள் ஆல்ரவுண்டரிடம் நான்கு ஓவர்கள் வாங்க வேண்டி இருந்தது. இதுவே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.