இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு இதுதான் காரணம் - இலங்கை கேப்டன் அசலங்கா
இலங்கைக்கு எதிராக நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது.
பல்லகெலே,
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இலங்கை அணியும் 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 137 ரன்களே அடித்தது.
இதன் காரணமாக வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீசினார். இந்த சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.
நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட வாஷிங்டன் சுந்தருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின்னர் இலங்கை கேப்டன் சரித் அசலங்கா அளித்த பேட்டியில் கூறியதாவது,
மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டரில் எங்கள் பேட்டிங் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. மோசமான ஷாட்களை தேர்வு செய்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. எங்கள் பேட்டிங்கின் போது சுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்துவீசியதாலேயே ஹசரங்கா மேல் ஆர்டரில் பேட்டிங் செய்ய களம் இறங்கினார்.
அவர் அதிரடியாக ஆடி ரன்கள் எடுத்து கொடுப்பார் என நினைத்தோம். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. இந்த பிட்ச்சில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். இந்த பிட்ச்சில் பந்து பழையதாகும் போது ஷாட் செலக்சன் நன்றாக இருக்க வேண்டும். இந்த இலக்கு எட்டக்கூடியது என்பதால் எங்களால் சாக்கு சொல்ல முடியாது.
இதை விட நாங்கள் நன்றாக செயல்பட வேண்டியது முக்கியமாகும். அடுத்து நடைபெறும் ஒருநாள் தொடரின் போது எங்கள் அணியிடம் இருந்து பேட்டிங்கில் இன்னும் சிறந்த செயல்பாடுகளை பார்க்க விரும்புகிறேன். எங்கள் வீரர்கள் ஒருநாள் தொடரில் இன்னும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.