எங்களுடைய கிரிக்கெட்டில் இது மிகப்பெரிய சாதனை - ஆட்ட நாயகன் குல்பாடின் நைப்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் குல்பாடின் நைப் ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார்.
கிங்ஸ்டவுன்,
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 149 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. இதனால் ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவை 127 ரன்களில் ஆல் அவுட்டாக்கி அசத்தினர்.
அந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பாடின் நைப் 4 விக்கெட்டுகளும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
ஆப்கானிஸ்தான் அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய குல்பாடின் நைப் ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தியுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் தவற விட்ட வெற்றியை இங்கே பெற்றுள்ளதாக குல்பாடின் நைப் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். அத்துடன் தம்மை நம்பிய கேப்டன் ரஷித் கானுக்கு நன்றி தெரிவிக்கும் அவர் சமீப காலங்களில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்தை தோற்கடித்த ஆப்கானிஸ்தானின் வெற்றி சரித்திரம் துவங்கியுள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "நாங்கள் நீண்ட காலம் காத்திருந்தோம். எனக்கும் எங்கள் நாட்டுக்கும் எங்கள் மக்களுக்கும் இது அற்புதமான தருணம். எங்களுடைய கிரிக்கெட்டில் இது மிகப்பெரிய சாதனை. எங்களுடைய பயணத்துக்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்களுக்கு நன்றி. நாங்கள் 2 மாதங்களாக கடினமாக உழைத்தோம். அதற்கான முடிவு உங்கள் முன்னே இருக்கிறது. பிட்ச் பேட்டிங் செய்வதற்கு எளிதாக இல்லை. கொஞ்சம் பவுன்ஸ் இருந்தது. ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை எடுத்த நான் அதை அப்படியே தொடர்ந்தேன். என்னை நம்பியதற்காக ரஷித்துக்கு நன்றி.
இது மொத்தமாக எங்களுடைய அணியின் செயல்பாடு. குர்பாஸ் - இப்ராஹிம் நன்றாக பேட்டிங் செய்தனர். ஒரு வழியாக நாங்கள் ஆஸ்திரேலியாவை தோற்கடித்துள்ளோம். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் நிறைய மகத்தான சாதனைகள் இல்லை. கடந்த உலகக் கோப்பையில் நாங்கள் நன்றாக விளையாடினோம். இந்த உலகக்கோப்பையில் நாங்கள் நியூசிலாந்தை தோற்கடித்தோம். எங்களுடைய வெற்றிப் பயணம் துவங்கியுள்ளது. ஒவ்வொரு போட்டியும் முக்கியம். தற்போது ஓய்வெடுத்து அடுத்த போட்டியை பற்றி சிந்திப்போம்" என்று கூறினார்.