இந்தியாவுக்கு எதிராக என்னுடைய திட்டம் இதுதான் - ஆட்டநாயகன் வெல்லலகே பேட்டி


இந்தியாவுக்கு எதிராக என்னுடைய திட்டம் இதுதான் - ஆட்டநாயகன் வெல்லலகே பேட்டி
x

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வெல்லலகே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

கொழும்பு,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது.

அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 230 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வெல்லலகே 67, நிசாங்கா 56 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 231 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 58 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் விரைவில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதே போல ஆட்டம் சமனில் இருந்தபோது கைவசம் 2 விக்கெட்டுகள் இருந்த நிலையில், ஷிவம் துபே மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆட்டமிழந்தனர். இதனால் இந்த ஆட்டம் சமனில் முடிவடைந்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக ஹசரங்கா மற்றும் அசலன்கா தலா 3 விக்கெட்டுகளும், வெல்லலகே 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்திய துனித் வெல்லலகே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பின் வெல்லலகே அளித்த பேட்டியில், "நான் திட்டத்துடன் வந்தேன். பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தது. அதில் ஸ்பின்னர்கள் நன்றாக பந்து வீசிய நிலையில் நான் இந்திய பவுலர்களை அழுத்தத்திற்குள் போட முயற்சித்தேன். நானும் லியானகேவும் பார்ட்னர்ஷிப் அமைக்க விரும்பினோம். அதன் பின் ஹசரங்கா என்னுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார். பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தது. எனவே நாங்கள் 220 ரன்கள் அடிப்பதற்கு திட்டமிட்டோம். 2வது இன்னிங்சில் பிட்ச் கொஞ்சம் முன்னேறி நன்றாக இருந்தது. எங்களுடைய கேப்டன் அசலங்கா மற்றும் ஹசரங்கா ஆகியோர் போட்டியை மாற்றினர். இன்று நாங்கள் நல்ல போட்டியை விளையாடினோம்" என்று கூறினார்.


Next Story