இந்திய அணியில் 2 விராட் கோலி இருக்கின்றனர் - பாக். முன்னாள் கேப்டன் பாராட்டு


இந்திய அணியில் 2 விராட் கோலி இருக்கின்றனர் - பாக். முன்னாள் கேப்டன் பாராட்டு
x

பேட்டிங்கில் விராட் கோலி எப்படியோ அதேபோல பந்து வீச்சில் பும்ரா என்று சோயிப் மாலிக் பாராட்டியுள்ளார்.

லாகூர்,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கி உள்ளது. அந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் 53, ஹர்டிக் பாண்டியா 32 ரன்கள் எடுத்தனர். பந்து வீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.

இந்தத் தொடரில் இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் பும்ரா டி20 உலகக்கோப்பையில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்தார். அதே வேகத்தில் தற்போது சூப்பர் 8 சுற்றிலும் அசத்த துவங்கியுள்ள அவர் தொடர்ந்து பந்து வீச்சுத் துறையில் இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் பேட்டிங்கில் விராட் கோலி எப்படியோ அதே போல பந்து வீச்சில் பும்ரா அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் தொடர்ச்சியாக அசத்தி வருவதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் பாராட்டியுள்ளார்.

அதனால் இந்திய அணி 2 விராட் கோலியுடன் விளையாடுவதாக தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:- "விராட் கோலி கடந்த பல வருடங்களாக நன்றாக செயல்பட்டு இந்தியா போட்டிகளை வெல்வதற்கு உதவி வருகிறார். அதேபோல பும்ராவை நான் பந்து வீச்சின் விராட் கோலி என்று சொல்வேன். ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் பந்து வீச்சில் அசத்தக்கூடிய அவருடைய பிரத்தியேக திறமையை நாம் பேசி வருகிறோம். புதிய பந்திலும் பழைய பந்திலும் மெதுவாக வீசக்கூடிய திறமை கொண்டுள்ள அவர் முழுமையான பவுலர்.

டி20 மட்டுமின்றி அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் அவர் அசத்துகிறார். போட்டியின் முடிவில் ரோகித் சர்மா அவரைப் பற்றி புகழ்ந்து பேசினார். மற்ற அணிகளிலும் தொடர்ந்து அசத்தக்கூடிய பவுலர்கள் இருக்கின்றனர். ஆனால் பும்ரா ஐசிசி தொடர்களில் எப்போதும் பார்மை இழந்ததாக தெரியவில்லை. அவர் எப்போதும் பார்மில் இருக்கிறார். அவர் பேட்ஸ்மேன்களிடம் அடி வாங்குவதில்லை. அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் அவர் அசத்துகிறார்" என்று கூறினார்.


Next Story