147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான உலக சாதனையை பதிவு செய்த ஜிம்பாப்வே வீரர்


147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான உலக சாதனையை பதிவு செய்த ஜிம்பாப்வே வீரர்
x

image courtesy: twitter/@ICC

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

பெல்பாஸ்ட்,

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி 210 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக பிரின்ஸ் மஸ்வாரே 74 ரன்கள் அடித்தார். அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக பாரி மெக்கார்த்தி மற்றும் ஆண்டி மெக்பிரைன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து 250 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஆன மூர் 79 ரன்கள் அடிக்க, ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி மற்றும் தனகா சிவாங்கா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் 40 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே 197 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் அயர்லாந்து வெற்றி பெற 158 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது ஜிம்பாப்வே. அந்த அணியில் அதிகபட்சமாக டியான் மியர்ஸ் 57 ரன்கள் அடித்தார். அயர்லாந்து தரப்பில் ஆண்டி மெக்பிரைன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து 3-வது நாள் முடிவில் 33 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த போட்டியில் அயர்லாந்து அணியின் முதல் இன்னிங்சின்போது ஜிம்பாப்வே 59 ரன்களை எக்ஸ்ட்ரா வகையில் வழங்கியது. அதிலும் குறிப்பாக ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள் வீசிய பவுன்சர் மற்றும் அகல பந்துகளை விக்கெட் கீப்பர் கிளைவ் மடாண்டே பிடிக்க முடியாமல் திண்டாடினார். அந்த வகையில் நிறைய பவுண்டரிகளை விட்ட அவர் மொத்தமாக 42 பைஸ் ரன்களை கொடுத்தார்.

இதன் மூலம் 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு விக்கெட் கீப்பர் 40க்கும் மேற்பட்ட பைஸ் ரன்களை கொடுப்பது இதுவே முதல் முறையாகும். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக பைஸ் ரன்கள் கொடுத்த விக்கெட் கீப்பர் என்ற மோசமான உலக சாதனையை கிளைவ் மடாண்டே படைத்துள்ளார்.


Next Story