ஆடும் லெவனை மாற்றாமல் விளையாடியதே இந்த வெற்றிக்கு காரணம் - ரஷீத் கான்


ஆடும் லெவனை மாற்றாமல் விளையாடியதே இந்த வெற்றிக்கு காரணம் -  ரஷீத் கான்
x

Image Courtesy: AFP

இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின் ஆடும் லெவனை மாற்றாமல் விளையாடியதே இந்த வெற்றிக்கு காரணம் என ரஷீத் கான் கூறியுள்ளார்.

செயிண்ட் வின்சென்ட்,

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 149 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. இதனால் ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவை 127 ரன்களில் ஆல் அவுட்டாக்கி அசத்தினர்.

அந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பாடின் நைப் 4 விக்கெட்டுகளும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர். ஆப்கானிஸ்தான் அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய குல்பாடின் நைப் ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தியுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின் ஆடும் லெவனை மாற்றாமல் விளையாடியதே இந்த வெற்றிக்கு காரணம் என ரஷீத் கான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, எங்களுடைய நாட்டுக்கும், அணிக்கும் இது மிகப்பெரிய வெற்றி. இதைத்தான் நாங்கள் 2023 உலகக் கோப்பை உட்பட கடந்த 2 வருடங்களாக தவற விட்டோம். இந்த வெற்றியால் மகிழ்ச்சி. எங்கள் வீரர்களால் பெருமைப்படுகிறேன். இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின்னும் அதே ஆடும் லெவலுடன் விளையாட முடிவெடுத்தது வெற்றிக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்தது.

நாங்கள் எதிரணியின் பவுலிங் வரிசையை பார்த்து அதற்கு தகுந்தார் போல் ஆடும் லெவனை தேர்ந்தெடுத்தோம். இந்த பிட்ச்சில் 140 ரன்கள் நல்ல ஸ்கோராகும். நல்ல துவக்கத்தை பெற்ற நாங்கள் நன்றாக பினிஷிங் செய்யவில்லை. ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் நல்ல துவக்கத்தை கொடுத்தது. இந்த பிட்ச்சில் 130 ரன்கள் அடித்தால் கூட அதை கட்டுப்படுத்தக்க்கூடிய திறமையும் நம்பிக்கையும் எங்களிடம் இருக்கிறது. அது தான் இந்த அணியின் அழகாகும்.

எங்களது அணியில் ஆல் ரவுண்டர்களுக்கான தேர்வுகள் நிறைய இருக்கின்றன. நல்ல அனுபவத்தை கொண்ட குல்பதின் இன்று சிறப்பாக பந்து வீசி அசத்தினார். டேவிட் வார்னரின் விக்கெட்டை எடுத்து முகமது நபி போட்டியை துவங்கியது நன்றாக அமைந்தது. இது எங்களுடைய நாட்டில் இருக்கும் மக்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த வெற்றியால் அவர்கள் பெருமையுடன் இருப்பார்கள் என்று சொல்வேன். அவர்கள் இந்த வெற்றியை கொண்டாடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story