சர்பராஸ் கானுக்கு உண்மையான சவால் அங்குதான் காத்திருக்கிறது- கங்குலி
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்சிலும் சர்பராஸ் கான் அரைசதம் அடித்து அசத்தினார்.
மும்பை,
இங்கிலாந்துக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2- 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக ராஜ்கோட் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.
அந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சர்பராஸ் கான் முதல் இன்னிங்சில் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 50 ரன்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-வது அதிவேகமான அரை சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற பாண்ட்யாவின் சாதனையை சமன் செய்தார்.
இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக 62 ரன்களில் அவுட்டான அவர் 2-வது இன்னிங்சில் மீண்டும் அதிரடியாக விளையாடி 68 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியின் 2 இன்னிங்சிலும் அரை சதம் அடித்த 4-வது இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.
இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து போராடினால் இந்தியாவுக்காக விளையாடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக சர்பராஸ் கான் அறிமுகமாகி அசத்தியுள்ளதாக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார். இருப்பினும் சர்பராஸ் கானுக்கு உண்மையான சவால் வெளிநாட்டு மண்ணில் ரன்கள் குவிப்பதில்தான் இருக்கிறது என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-
"ஜெய்ஸ்வால் நல்ல வீரர். அவர் இந்தியாவுக்காக அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்கு தகுதியானவர். சர்பராஸ் கான் தன்னுடைய கெரியரை நேர்மறையாக துவங்கியுள்ளார். ஆனால் வெளிநாட்டு சூழ்நிலைகளில்தான் அவருக்கு மிகப்பெரிய சோதனை காத்திருக்கும். எனவே அவர் இந்திய துணை கண்டத்திற்கு வெளியே தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும். அதே சமயம் உள்ளூர் கிரிக்கெட்டில் நீங்கள் தொடர்ந்து ரன்கள் அடித்தால் நாட்டுக்காக விளையாட முடியும் என்பதற்கு சர்பராஸ் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார்" என்று கூறினார்.