இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது.
காலே,
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் திமுத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி சமீபத்தில் ஜிம்பாப்வேயில் நடந்த உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கையோடு களம் இறங்குகிறது. உள்ளூர் சூழ்நிலை அந்த அணிக்கு அனுகூலமாக இருக்கும். அத்துடன் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் தனது கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றியை ருசித்து இருப்பது இலங்கை அணிக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுக்கும்.
பாகிஸ்தான் அணி கடைசியாக நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தோல்வியையும் (0-3), நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் டிராவும் (0-0) அடுத்தடுத்து கண்டது. காயம் காரணமாக கடந்த ஒரு ஆண்டாக டெஸ்ட் அணியில் இடம் பெறாத வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி மீண்டும் திரும்பி இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம் அளிக்கும்.
சமபலம் வாய்ந்த இரு அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த தொடரை வெற்றியுடன் தொடங்க கடுமையாக மல்லுகட்டும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இதுவரை டெஸ்ட் போட்டியில் 57 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பாகிஸ்தான் 21 ஆட்டங்களிலும், இலங்கை 17 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 19 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இலங்கை: திமுத் கருணாரத்னே (கேப்டன்), நிஷான் மதுஷ்கா, குசல் மென்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சன்டிமால், தனஞ்ஜெயா டி சில்வா, சமரவிக்ரமா, ரமேஷ் மென்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, தில்ஷன் மதுஷன்கா, விஷ்வா பெர்னாண்டோ அல்லது பிரவீன் ஜெயவிக்ரமா.
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், ஷான் மசூத், பாபர் அசாம் (கேப்டன்), சர்ப்ராஸ் அகமது, சாத் ஷகீல், அகா சல்மான், முகமது நவாஸ், நசீம் ஷா, அப்ரார் அகமது, ஷகீன் ஷா அப்ரிடி.இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் 2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.