இங்கிலாந்து-நியூசிலாந்து மோதும் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது
இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கார்டிப்பில் இன்று நடக்கிறது.
கார்டிப்,
ஒரு நாள் கிரிக்கெட்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் மோதிய 20 ஓவர் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
அடுத்ததாக 4 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இங்கிலாந்து- நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கார்டிப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. உலகக் கோப்பை போட்டிக்கு சரியான ஆடும் லெவன் அணியை அடையாளம் காண்பதற்கு இந்த தொடர் உதவிகரமாக இருக்கும் என்பதால் அந்த வகையில் இரு அணிக்கும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலம் வாய்ந்ததாக திகழ்கிறது. ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். சமீபத்தில் அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க உலகக் கோப்பை போட்டிக்காக ஓய்வு முடிவில் இருந்து விடுபட்டு அணிக்கு திரும்பியுள்ளார். அவரது மறுபிரவேசம் எப்படி இருக்கும் என்பது நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தெரிந்து விடும். ஸ்டோக்ஸ் வந்ததால் அதிரடி இளம் பேட்ஸ்மேன் ஹாரி புரூக்குக்கு இங்கிலாந்து உலகக் கோப்பை அணியில் இடம் கிட்டவில்லை. என்றாலும் இந்த தொடரில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டார். அவர் ரன்மழை பொழிந்தால் அவருக்கு உலகக் கோப்பை கதவு மீண்டும் திறக்கப்பட வாய்ப்பு உண்டு. நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் தோள்பட்டை வலியால் அவதிப்பட்ட ஜானி பேர்ஸ்டோ இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான். மற்றபடி ஜோ ரூட், டேவிட் மலான், ஜாசன் ராய், லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ் அணிக்கு வலு சேர்க்கிறார்கள்.
பவுல்ட் வருகை
நியூசிலாந்து அணி டாம் லாதம் தலைமையில் களம் இறங்குகிறது. 20 ஓவர் தொடரில் தொடக்கத்தில் தடுமாறிய நியூசிலாந்து கடைசி இரு ஆட்டத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதனால் ஒரு நாள் போட்டியில் கூடுதல் நம்பிக்கையுடன் அடியெடுத்து வைப்பார்கள். 20 ஓவர் தொடரில் ஒற்றை இலக்கத்தை தாண்டாத டிவான் கான்வே பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.
கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருந்து விலகியதால் ஓரங்கட்டப்பட்ட இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் உலகக் கோப்பை போட்டிக்காக இப்போது ஒரு நாள் போட்டி அணிக்கு தேர்வாகியுள்ளார். ஓராண்டுக்கு பிறகு அவர் ஒரு நாள் போட்டியில் ஆட உள்ளார். அவருடன் டிம் சவுதி, ஆடம் மில்னே, மிட்செல் சான்ட்னெர், கைல் ஜாமிசன் ஆகியோரும் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளனர். பேட்டிங்கில் பின்ஆலென், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், ஹென்றி நிகோல்ஸ், டேரில் மிட்செல் நம்பிக்கை அளிக்கிறார்கள். அதனால் இந்த ஆட்டம் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதுவரை....
ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 91 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 41-ல் இங்கிலாந்தும், 43-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன. 3 ஆட்டங்கள் சமனில் முடிந்தது. 4 ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை
2019-ம் ஆண்டு ஜூலையில் நடந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதின. பரபரப்பான இறுதி ஆட்டம் சமனில் முடிந்ததால் பிறகு சூப்பர் ஓவர் மற்றும் அதிக பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்து மகுடம் சூடியது. அதன் பிறகு ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மல்லுக்கட்டுவது இதுவே முதல் முறையாகும்.
இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.