என்னுடைய மிகப்பெரிய இலக்கு அதுதான் - ஆட்ட நாயகன் கலீல் அகமது பேட்டி


என்னுடைய மிகப்பெரிய இலக்கு அதுதான் - ஆட்ட நாயகன் கலீல் அகமது பேட்டி
x

image courtesy: twitter/@IPL

சென்னைக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் கலீல் அகமது ஆட்ட நாயகன் விருது வென்றார்.

விசாகப்பட்டினம்,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி தோற்கடித்தது. விசாகப்பட்டினத்தில் நடந்த அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 192 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதைத்தொடர்ந்து சேசிங் செய்த சென்னை 20 ஓவரில் 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் காரணமாக 2 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லிக்கு அதிகபட்சமாக முகேஷ் குமார் 3, கலீல் அகமது 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட கலில் அகமது ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் உள்ளூர் போட்டிகளில் விளையாடியதே இந்த போட்டியில் தாம் அசத்தியதற்கான காரணம் என்று கலீல் அகமது கூறியுள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகள்தான் டி20 கிரிக்கெட்டில் எப்படி அசத்த வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதாகவும் தெரிவிக்கும் அவர் இந்தியாவுக்கு மீண்டும் விளையாடுவதே தம்முடைய இலக்கு என்றும் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் அளித்த பேட்டியில் பேசியது பின்வருமாறு:- "உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக வேலை செய்தேன். கடந்த ஆறு மாதமாக நிறைய கிரிக்கெட் விளையாடியது என்னுடைய ஆட்டத்தை சிறப்பாக மாற்ற உதவியது. பந்து ஸ்விங்காகி பேட்ஸ்மேன்கள் தடுமாறுவதை விரும்புகிறேன். தற்போது எனக்கு நானே எப்படி பிட்டாக இருக்க வேண்டும் என்பதையும் கண்டறிய முயற்சித்து வருகிறேன்.

டெஸ்ட் போட்டிகள்தான் உங்களுக்கு பந்து உங்களுடைய கையிலிருந்து எப்படி வெளியே வருகிறது என்பது உட்பட நிறையவற்றை கற்றுக் கொடுக்கிறது. இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய மிகப்பெரிய இலக்காகும்" என்று கூறினார்.


Next Story