டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல்; முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா...சரிவை சந்தித்த வங்காளதேசம்


டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல்; முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா...சரிவை சந்தித்த வங்காளதேசம்
x

image courtesy: AFP

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 280 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

துபாய்,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 376 ரன்னும், வங்காளதேசம் 149 ரன்னும் எடுத்தன.

தொடர்ந்து 227 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 64 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து வங்காளதேசத்திற்கு 515 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேசம், இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் வங்காளதேசம் 234 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 280 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா (71.67 சதவீதம்) முதல் இடத்தில் நீடிக்கிறது. தோல்வி கண்ட வங்காளதேசம் (39.29 சதவீதம்) 4வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு சரிந்துள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) 2வது இடத்திலும், நியூசிலாந்து (50.00 சதவீதம்) 3வது இடத்திலும் நீடிக்கின்றன. வங்காளதேசத்தின் சரிவால் இலங்கை (42.86 சதவீதம்) 4வது இடத்திற்கும், இங்கிலாந்து (42.19 சதவீதம்) 5வது இடத்திற்கும் முன்னேறி உள்ளன.

இந்தப்பட்டியலில் 7 முதல் 9 இடங்களில் தென் ஆப்பிரிக்கா (38.89 சதவீதம்), பாகிஸ்தான் (19.05 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) அணிகள் உள்ளன.


Next Story