வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வீரர் குசல் மென்டிஸ் நெஞ்சுவலியால் வெளியேறினார்


வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வீரர் குசல் மென்டிஸ் நெஞ்சுவலியால் வெளியேறினார்
x

இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று தொடங்கியது.

மிர்புர்,

இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த வங்காளதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மக்முதுல் ஹசன் ஜாய், தமிம் இக்பால் ஆகியோர் ரன் ஏதுமின்றியும் கேப்டன் மொமினுல் ஹக் 9 ரன்னிலும், நஜ்முல் ஹூசைன் 8 ரன்னிலும், ஷகிப் அல்-ஹசன் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 24 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

6-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் லிட்டான் தாஸ், முஷ்பிகுர் ரஹிமுடன் கைகோர்த்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்தது. 9-வது சதம் அடித்த முஷ்பிகுர் ரஹிம் 115 ரன்களுடனும், 3-வது சதம் விளாசிய லிட்டான் தாஸ் 135 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இலங்கை அணி தரப்பில் கசுன் ரஜிதா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

இந்த போட்டியில் 23-வது ஓவரின் போது பீல்டிங் செய்து கொண்டிருந்த இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான குசல் மென்டிஸ் நெஞ்சு வலிப்பதாக கூறியதை அடுத்து அணியின் உதவியாளர்கள் உதவியுடன் வெளியேறினார். அவர் உடனடியாக டாக்காவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட முதல் கட்ட பரிசோதனையில் இதயத்தில் பிரச்சினை எதுவும் இல்லை என்றும் தசைப்பிடிப்பு தான் வலிக்கு காரணம் என்றும் தெரியவந்து இருப்பதால் இலங்கை அணி நிர்வாகம் நிம்மதி அடைந்துள்ளது.


Next Story