ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 510 ரன்களில் 'டிக்ளேர்'
தமிழக அணி முதல் இன்னிங்சில் 111.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 510 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
ஐதராபாத்,
38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் நடக்கும் 'பி' பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, ஐதராபாத்தை சந்தித்தது. முதலில் பேட் செய்த ஐதராபாத் முதல் இன்னிங்சில் 395 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 203 ரன்கள் எடுத்து இருந்தது. சாய் சுதர்சன் 87 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் ஜெகதீசன் 116 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஜெகதீசன் முதல் ஓவரிலேயே முந்தைய நாளைய ஸ்கோருடன் (116 ரன்) கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கவின் 36 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். நிலைத்து நின்று ஆடிய சாய் சுதர்சன் 179 ரன்னிலும், கேப்டன் பாபா இந்திரஜித் 48 ரன்னிலும் அவுட் ஆனார்கள். தமிழக அணி முதல் இன்னிங்சில் 111.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 510 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பாபா அபராஜித் 115 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
அடுத்து 115 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஐதராபாத் அணி ஆட்ட நேரம் முடிவில் 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.
ராஞ்சியில் நடந்து வரும் கேரளா-ஜார்கண்ட் (சி பிரிவு) அணிகள் இடையிலான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கேரளா முதல் இன்னிங்சில் 475 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய ஜார்கண்ட் அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்து இருந்தது.
3-வது நாளான நேற்று ஆடிய ஜார்கண்ட் அணி 105.3 ஓவர்களில் 340 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 132 ரன்னும், சவுரப் திவாரி 97 ரன்னும் சேர்த்தனர். 135 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய கேரளா அணி ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்தது.