டி20 உலகக்கோப்பை: சுப்மன் கில், ஆவேஷ் கான் விடுவிக்கப்பட்டதற்கான காரணம் என்ன..? - பயிற்சியாளர் பதில்


டி20 உலகக்கோப்பை: சுப்மன் கில், ஆவேஷ் கான் விடுவிக்கப்பட்டதற்கான காரணம் என்ன..? - பயிற்சியாளர் பதில்
x

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரர்களாக இடம்பெற்றிருந்த சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

புளோரிடா,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சூப்பர் 8 சுற்றில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் ஜூன் 20ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியை சந்திக்கிறது.

இதனிடையே இந்திய அணி நிர்வாகம் (பி.சி.சி.ஐ.) அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியுடன், 4 பேர் ரிசர்வ் வீரர்களாக பயணித்தனர். ரிங்கு சிங், சுப்மன் கில், ஆவேஷ் கான் மற்றும் கலீல் அகமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர். தற்போது ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் உள்ள சுப்மன் கில், ஆவேஷ் கான் இருவரும் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்ப உள்ளனர்.

இதில் சுப்மன் கில் இந்திய அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டாலும், இந்திய அணி விளையாடும் போட்டிகளை நேரில் காண வரவில்லை. ஆவேஷ் கான், ரிங்கு சிங், கலீல் அகமது ஆகியோர் நேரில் வந்த போதும், சுப்மன் கில் மட்டும் மைதானத்திற்கு வராமலேயே இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவை பின் தொடர்வதில் இருந்து சுப்மன் கில் விலகினார். அப்படி நன்னடத்தையை பின்பற்றாததாலும் ரோகித் சர்மாவுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாகவும் சுப்மன் கில் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் அதை மறுத்துள்ள இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் உண்மையான காரணத்தை பற்றி பேசியது பின்வருமாறு:

-"இது எங்களுடைய ஆரம்பகட்ட திட்டமாகும். அமெரிக்காவுக்கு வந்தபோது எங்களுடன் 4 ரிசர்வ் வீரர்கள் இருந்தனர். அங்கு போட்டிகள் முடிந்ததும் இருவரை விடுவிப்பது என்றும் இருவர் மட்டும் எங்களுடன் வெஸ்ட் இண்டீஸ் வருவது என்றும் ஏற்கனவே நாங்கள் தீர்மானித்தோம். எனவே அணி தேர்வான போதே இந்த திட்டம் வகுக்கப்பட்டது. அதை நாங்கள் தற்போது பின்பற்றுகிறோம். அவ்வளவுதான்" என்று கூறினார்.


Next Story