டி20 உலகக்கோப்பை: விராட் வேணாம்...அவரை தொடக்க வீரராக களமிறக்குங்கள் - இயன் பிஷப்


டி20 உலகக்கோப்பை: விராட் வேணாம்...அவரை தொடக்க வீரராக களமிறக்குங்கள் - இயன் பிஷப்
x

நேற்று நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விராட் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

நியூயார்க்,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 8-ஆவது லீக் போட்டியில் அயர்லாந்து - இந்திய அணிகள் மோதின. இதில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடியிருந்தனர். இதன் காரணமாக தற்போது இளம் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனால் இந்த ஆட்டத்தில் விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

முன்னதாக மிகச்சிறப்பான பார்மில் இருந்து வந்த ஜெய்ஸ்வால் ஐபிஎல் தொடரின்போது பார்மை இழந்து தடுமாறினார். ஐபிஎல் தொடரின் நடுப்பகுதியில் அவர் மீண்டும் பார்மிற்கு திரும்பினாலும் கடைசியில் சரியாக முடிக்க முடியவில்லை.

இந்நிலையில் தற்போதைய டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் விளையாடுவதற்கு போதுமான பார்ம் இருப்பதாக நம்புவதாகவும் அவரை தொடக்க வீரராக விளையாட வைக்க வேண்டும் என்றும் இயன் பிஷப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், " ஐபிஎல் தொடரின்போது ஜெய்ஸ்வாலின் பார்ம் சற்று கவலை தரும் விதமாக இருந்தது உண்மைதான். ஆனால் இந்திய அணியின் தொடக்க வீரராக விளையாடக்கூடிய அளவிற்கு அவர் தகுதியுடன் இருப்பதாக நினைக்கிறேன். அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர். அதனால் விராட் கோலிக்கு பதிலாக அவர் தொடக்க வீரராக விளையாட வேண்டும். இந்திய அணியின் தொடக்க வீரராக ஒரு இடதுகை ஆட்டக்காரர் இருப்பது இந்திய அணிக்கு மேலும் பலத்தை சேர்க்கும்" என்று கூறினார்.


Next Story