டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் இவைதான் - மிஸ்பா உல் ஹக்


டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் இவைதான் - மிஸ்பா உல் ஹக்
x

image courtesy: AFP

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு கண்டிப்பாக ஆஸ்திரேலியா தகுதி பெறும் என்று மிஸ்பா-உல்-ஹக் கணித்துள்ளார்.

கராச்சி,

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட வரலாற்றிலேயே முதல் முறையாக 20 அணிகள் விளையாடுகின்றன. அந்த அணிகளுக்கு சவாலை கொடுத்து 2007-க்கு பின் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது.

இந்த நிலையில் இத்தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டியில் விளையாடப் போகும் அணிகள் பற்றி நிறைய முன்னாள் வீரர்கள் கணித்து வருகின்றனர். அந்த வகையில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா நல்ல பார்மில் இருக்கின்றன. எனவே இம்முறையும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ளதாக கணிப்புகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு கண்டிப்பாக ஆஸ்திரேலியா தகுதி பெறும் என்று மிஸ்பா-உல்-ஹக் கணித்துள்ளார். அதேபோல 2-வது அணியாக பாகிஸ்தான் அல்லது இந்தியா தகுதி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

"ஆஸ்திரேலியாவை தேர்ந்தெடுப்பது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு எப்படி வெல்வது என்பது தெரியும். சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு வெற்றி பெறுவதற்கான வழி தெரியும். கடந்த வருடம் ஆசியாவுக்கு வந்த அவர்கள் ஒரு ஸ்பின்னரை மட்டும் வைத்து உலகக்கோப்பையை வென்றனர். எனவே இந்த உலகக்கோப்பையிலும் ஆஸ்திரேலியாவை நீங்கள் குறைத்து எழுத முடியாது. 2-வது அணியை கணிப்பது மிகவும் கடினம். இருப்பினும் பாகிஸ்தானை சேர்ந்த நான் பாகிஸ்தான் தகுதி பெறும் என்று ஆதரவு கொடுப்பேன். இந்திய அணியும் மிகவும் வலுவானது. அதேபோல மற்ற அணிகளும் வலுவாகவே உள்ளன" என்று கூறினார்.


Next Story