டி20 உலகக் கோப்பை: இந்தியாவை சரிவிலிருந்து மீட்ட சூர்யகுமார்- தென் ஆப்பிரிக்கா அணிக்கு 134 ரன்கள் இலக்கு


டி20 உலகக் கோப்பை: இந்தியாவை சரிவிலிருந்து மீட்ட சூர்யகுமார்- தென் ஆப்பிரிக்கா அணிக்கு 134 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 30 Oct 2022 6:08 PM IST (Updated: 30 Oct 2022 6:11 PM IST)
t-max-icont-min-icon

ஒரு கட்டத்தில் இந்திய அணி 49 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது.

பெர்த்,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது . இந்த போட்டி தொடரில் பெர்த்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வரும் போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியா-தென்ஆப்பிரிக்கா (குரூப் 2) அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் ரோகித் சர்மா கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா- கே.எல் ராகுல் களமிறங்கினர்.

முதல் ஓவரை எதிர்கொண்ட கே.எல் ராகுல் அந்த ஓவரில் ஒரு ரன் கூட சேர்க்கவில்லை. தென் ஆப்பிரிக்கா அணியின் சிறப்பான பந்துவீச்சால் பவர்பிளேவில் இந்திய அணியால் அதிரடி காட்ட முடியவில்லை. மாறாக நிகிடி வீசிய 5-வது ஓவரில் ரோகித் சர்மா 15 ரன்களிலும், ராகுல் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் இந்திய அணி பவர்பிளே முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்து இருந்தது. இதை தொடர்ந்து நிகிடி வீசிய 7-வது ஓவரில் கோலி 12 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதை தொடர்ந்து தீபக் ஹூடா டக் அவுட்டாகியும், ஹர்திக் பாண்டியா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 49 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது.

இதன்பின் சூர்யகுமார் யாதவ்- தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தனர். ஒருபுறம் தினேஷ் அதிக டாட் பந்துகளை விளையாட சூர்யகுமார் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து 15 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தினேஷ் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த அஸ்வின் தனது பங்கிற்கு 7 ரன்கள் சேர்த்து அவுட்டானார். ஒருபுறம் விக்கெட்கள் சரிந்தாலும் சூர்யகுமாரின் அதிரடியால் இந்திய அணி மிகப்பெரிய சரிவில் இருந்து மீண்டது. அவர் 40 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நிகிடி 4 விக்கெட்களை கைப்பற்றினார். இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.


Next Story