டி20 உலகக்கோப்பை: ரிங்கு சிங்கை பலி ஆடாக தேர்வுக் குழு மாற்றியுள்ளது - ஸ்ரீகாந்த் விமர்சனம்


டி20 உலகக்கோப்பை: ரிங்கு சிங்கை பலி ஆடாக தேர்வுக் குழு மாற்றியுள்ளது -  ஸ்ரீகாந்த் விமர்சனம்
x
தினத்தந்தி 1 May 2024 5:55 PM IST (Updated: 1 May 2024 6:02 PM IST)
t-max-icont-min-icon

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

சென்னை,

20 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.

இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கும் நிலையில், துணை கேப்டன் பொறுப்பு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல விக்கெட் கீப்பர்களாக நல்ல பார்மில் உள்ள ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வாகியுள்ளது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் ரிங்கு சிங் கழற்றி விடப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஏனெனில் கடந்த ஐ.பி.எல். தொடரில் குஜராத்துக்கு எதிராக 5 சிக்சர்கள் அடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் பெரும்பாலான போட்டிகளில் அட்டகாசமாக செயல்பட்ட அவர் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகள், தென் ஆப்பிரிக்க தொடர், 2024 ஆப்கானிஸ்தான் டி20 தொடர்களில் சிறந்த பினிஷராக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.

இருப்பினும் தற்போதைய ஐ.பி.எல். தொடரில் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினார் என்ற ஒரே காரணத்திற்காக ரிங்குவை கழற்றி விட்டுள்ள தேர்வு குழு ரிசர்வ் பட்டியலில் மட்டுமே இணைத்துள்ளது. இந்நிலையில் நியாயமற்ற காரணத்தை சொல்லி ரிங்கு சிங்கை பலி ஆடாக தேர்வுக் குழு மாற்றியுள்ளதாக ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"நான் மகிழ்ச்சியாக இல்லை. ரிங்கு சிங் உலக அளவில் பேசப்பட்டவர். அவர் தமக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் இந்தியாவுக்காக அசத்தியவர். அப்படிப்பட்ட அவரை நீங்கள் எப்படி டிராப் செய்ய முடியும்? மற்றவர்களை எடுக்காமல் போயிருந்தாலும் என்னுடைய பார்வையில் ரிங்கு சிங் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். அதற்காக நீங்கள் ஜெய்ஸ்வாலை கூட நீக்கியிருந்திருக்கலாம். தென் ஆப்பிரிக்காவில் அவர் வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதமடித்த கடைசி போட்டி நினைவிருக்கிறதா? 22/4 என தடுமாறிய இந்தியா 212 ரன்கள் அடிப்பதற்கு ரிங்கு முக்கிய காரணமாக இருந்தார். தமக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் இந்தியாவுக்காக அவர் தம்முடைய அனைத்தையும் கொடுத்துள்ளார். எனவே இது ஒரு குப்பையான தேர்வாகும். உங்களுக்கு 4 ஸ்பின்னர்கள் தேவையா? நீங்கள் சிலரை திருப்திப்படுத்துவதற்காக இந்த தேர்வை செய்துள்ளீர்கள். அதற்காக நீங்கள் ரிங்கு சிங்கை பலி ஆடாக மாற்றியுள்ளீர்கள்" என்று கூறினார்.


Next Story