டி20 உலகக்கோப்பை; அமெரிக்க வீரரை பாராட்டிய ரவிச்சந்திரன் அஸ்வின்


டி20 உலகக்கோப்பை; அமெரிக்க வீரரை பாராட்டிய ரவிச்சந்திரன் அஸ்வின்
x

கோப்புப்படம்

ஆரோன் ஜோன்ஸை இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.

டல்லாஸ்,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்துகின்றன. இந்த தொடரின் முதலாவது ஆட்டத்தில் அமெரிக்கா - கனடா அணிகள் டல்லாஸ் நகரில் மோதின.

இதில் டாஸ் வென்ற அமெரிக்க அணியின் கேப்டன் மோனாங்க் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த கனடா 20 ஓவர்களில் 194 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நவ்நீத் தலிவால் 61 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்கா வெறும் 17.4 ஓவர்களிலேயே இலக்கை கடந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆரோன் ஜோன்ஸ் 10 சிக்சர்கள் உட்பட 94 ரன்கள் குவித்தார். ஆரோன் ஜோன்ஸ் இந்த ஆட்டத்தில் அடித்த 10 சிக்சர்கள் மூலம் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த கிறிஸ் கெய்லை (10 சிக்சர்) அவர் சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் கிறிஸ் கெயில் (11 சிக்சர்) உள்ளார்.

இந்நிலையில் கிறிஸ் கெயிலின் சாதனையை சமன் செய்த ஆரோன் ஜோன்ஸை இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

ஆரோன் ஜோன்ஸ் சியாட்டில் ஆர்காஸ் அணிக்காக விளையாடுகிறார். இன்று அவர் டி20 உலக கோப்பை தொடரில் முதல் போட்டியை ஒளிரச் செய்ய அற்புதமான பேட்டிங் செய்திருக்கிறார். இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக வங்காளதேசம் அணியை அமெரிக்கா ஏன் வீழ்த்த முடிந்தது என்பதை இன்று மீண்டும் காட்டி இருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story