டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் வெற்றி


டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் வெற்றி
x

image courtesy: Afghanistan Cricket Board twitter

ஆப்கானிஸ்தான் அணி 55 ரன் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

லாடெர்ஹில்,

20 ஓவர் உலகக் கோப்பை போட்டியையொட்டி அமெரிக்காவின் லாடெர்ஹில் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த பயிற்சி ஆட்டத்தில் இலங்கை - அயர்லாந்து அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 32 ரன்னும், கேப்டன் ஹசரங்கா 26 ரன்னும் திரட்டினர். அயர்லாந்து தரப்பில் ஜோஷ் லிட்டில், பாரி மெக்கர்த்தி தலா 2 விக்கெட்டும், மார்க் அடைர், கிரேக் யங், பென் ஒயிட், கர்டிஸ் கேம்பர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய அயர்லாந்து அணி 18.2 ஓவர்களில் 122 ரன்னில் சுருண்டது. இதனால் இலங்கை அணி 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கர்டிஸ் கேம்பர் 26 ரன்னும், கேப்டன் பால் ஸ்டிர்லிங் 21 ரன்னும் எடுத்தனர். இலங்கை தரப்பில் தசுன் ஷனகா 4 விக்கெட்டும், தீக்ஷனா, ஹசரங்கா தலா 2 விக்கெட்டும், துஷ்மந்தா சமீரா, பதிரானா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

வெஸ்ட்இண்டீசில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஸ்காட்லாந்து அணிகள் சந்தித்தன. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. குல்படின் நைப் 69 ரன்னும், அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் 48 ரன்னும் எடுத்தனர். ஸ்காட்லாந்து தரப்பில் கிறிஸ் சோல் 3 விக்கெட்டும், பிராட்லி குரி 2 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் ஆடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 123 ரன்னில் அடங்கியது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 55 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அதிகபட்சமாக மார்க் வாட் 34 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜீப் உர்-ரகுமான், கரீம் ஜனாத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


Next Story