டி20 உலகக்கோப்பை: இந்திய தேர்வு குழுவினர் அந்த வீரர் மீதும் ஒரு கண் வைத்துக்கொள்ள வேண்டும் - கவாஸ்கர்
ஜூன் 1ம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது.
ஜெய்ப்பூர்,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் சீசன் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் ஜூன் 1ம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க அனைத்து வீரர்களும் ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.
இதில் 2019-ல் அறிமுகம் ஆன முதலே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரியான் பராக் முந்தைய சீசன்களில் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் நடப்பு சீசனில் அபாரமாக செயல்பட்டு வரும் அவர் 43, 84, 54, 4, 76 என 5 போட்டிகளில் 3 அரை சதங்கள் உட்பட 261 ரன்களை 87.00 என்ற நல்ல சராசரியில் குவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த வருடம் வேறு மாதிரி விளையாடும் ரியான் பராக் மீது இந்திய தேர்வு குழுவினர் ஒரு கண்ணை வைத்துக்கொள்ள வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-
"கேட்ச் தவற விட்ட குஜராத்துக்கு ரியான் பராக் தக்க பரிசை கொடுத்தார். இதுதான் கிரிக்கெட்டாகும். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அதை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர் நம்ப முடியாத கிரிக்கெட்டை விளையாடினார்.
ஐ.பி.எல். மட்டுமல்லாமல் இந்த வருடம் உள்ளூர் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய அவர் நல்ல வெற்றிகளை கண்டுள்ளார். அதனால் தன் மீது அவர் தேர்வுக் குழுவினர் ஒரு கண்ணை வைக்க வைத்துள்ளார். பீல்டிங்கில் அசத்தக்கூடிய அவர் பந்து வீச்சிலும் சில ஓவர்களை வீசுவார். எனவே டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் குழுவினர் அவர் மீதும் ஒரு கண் வைத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.