டி20 உலகக்கோப்பை; ரோகித் சர்மா - விராட் கோலியின் சாதனையை சமன் செய்த குர்பாஸ் - இப்ராஹிம் ஜட்ரான் இணை
டி20 உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் 100 ரன்களை கடந்த ஜோடி என்ற விராட் - ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளது.
கயானா ,
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் ஆடின.
இந்த ஆட்டம் வெஸ்ட் இண்டீசில் உள்ள கயானாவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது.
ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக குர்பாஸ் 80 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, பவுல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 75 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 84 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், பசல்ஹக் பரூக்கி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் தொடர்க்க ஜோடியாக களம் இறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராகிம் ஜட்ரான் இணை முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தது.
இந்த இணை தங்களது முதல் லீக் ஆட்டத்திலும் (உகாண்டாவிற்கு எதிராக) முதல் விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்திருந்தது. இதன் மூலம் இந்த இணை டி20 உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் 100 ரன்களை கடந்த ஜோடி என்ற விராட் - ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளது.
விராட் - ரோகித் சர்மா இணை கடந்த 2014 டி20 உலகக்கோப்பை தொடரின் போது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசத்திற்கு எதிரான அடுத்தடுத்த போட்டிகளில் 2வது விக்கெட்டுக்கு 100 ரன்களை கடந்து பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தது.