டி20 உலகக்கோப்பை தோல்வி: வீரர்களின் ஊதியத்தை குறைக்கும் பாக். கிரிக்கெட் வாரியம்


டி20 உலகக்கோப்பை தோல்வி: வீரர்களின் ஊதியத்தை குறைக்கும் பாக். கிரிக்கெட் வாரியம்
x

image courtesy: AFP

டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறியதால் வீரர்களின் ஊதியத்தை குறைக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கராச்சி,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு எதிராக தோல்வியும், கனடாவுக்கு எதிராக மட்டும் வெற்றியையும் பெற்று இரண்டு புள்ளிகளுடன் இருந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவும் அயர்லாந்தும் மோதிய ஆட்டம் மழையால் ரத்தானதால் அமெரிக்காவுக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் 5 புள்ளிகள் உடன் அமெரிக்க அணி இந்தியாவுடன் சூப்பர் 8 சுற்றுக்கு சென்று இருக்கிறது. இதனால் பாகிஸ்தானின் சூப்பர் 8 வாய்ப்பு முடிவுக்கு வந்தது.

2009-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறி இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் லீக் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கிரிக்கெட் வாரியத்தின் செயலால் தான் பாகிஸ்தான் அணியின் நிலை தற்போது மோசமாக இருப்பதாக குற்றஞ்சாட்டி உள்ளனர். இதனால் கடுப்பான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது வீரர்களின் ஊதியத்தை குறைக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி எந்த வீரர்கள் சரியாக விளையாடவில்லையோ, அவர்களின் ஊதியத்தை குறைத்து நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நாக்வி முடிவு எடுத்திருப்பதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்து இருக்கின்றன. மேலும் சரியாக விளையாடாத வீரர்களை ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கவும் முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்குள் மூன்று பிரிவுகளில் வீரர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வரும் வேளையில் தற்போது மூன்று பிரிவுகளிலும் இருக்கும் வீரர்களை தரவரிசைப்படி மாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Next Story