டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை சமாளிக்குமா அமெரிக்கா... 'சூப்பர் 8' சுற்றில் இன்று மோதல்
டி20 உலகக்கோப்பை தொடரில் ’சூப்பர் 8’ சுற்று ஆட்டங்கள் இன்று முதல் நடைபெற உள்ளது.
ஆன்டிகுவா,
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதில் பங்கேற்ற 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. முன்னாள் சாம்பியன்கள் பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 12 அணிகள் லீக் சுற்றுடன் மூட்டையை கட்டின.
சூப்பர்8 சுற்றில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப்1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், குரூப்2-ல் வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
லீக் ஆட்டங்கள் மட்டுமே அமெரிக்காவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. சூப்பர்8 சுற்றில் இருந்து இனி எல்லா ஆட்டங்களும் வெஸ்ட் இண்டீசில் மட்டுமே நடைபெறும்.
சூப்பர் 8 சுற்று
சூப்பர்8 சுற்று இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. முதல் நாளில் இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆன்டிகுவாவில் உள்ள சர்விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் அரங்கேறும் ஒரு ஆட்டத்தில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி, மோனக் பட்டேல் தலைமையிலான அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் தென்ஆப்பிரிக்கா வாகை சூடியது என்றாலும் ஒரு சில ஆட்டங்களில் சிறிய இலக்கை கூட பெரும்பாடு பட்டு தான் எட்டிப்பிடித்தது. பந்து வீச்சில் அன்ரிச் நோர்டியா, கேஷவ் மகராஜ், ஷம்சி, ரபடா, மார்கோ யான்சென் உள்ளிட்டோர் மிரட்டுகிறார்கள். பேட்டிங்கில் டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், கிளாசென் ஓரளவு நன்றாக ஆடுகிறார்கள். ஆனால் குயின்டான் டி காக் (4 ஆட்டத்தில் 48 ரன்), கேப்டன் மார்க்ரம் (31 ரன்) சொதப்பியுள்ளனர். இவர்களும் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும்.
20 ஓவர் உலகக் கோப்பையில் அறிமுக அணியாக நுழைந்த அமெரிக்கா, லீக் சுற்றில் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வீழ்த்தி ஆச்சரியப்படுத்தியது. அந்த அணியில் ஆரோன் ஜோன்ஸ், கோரி ஆண்டர்சன், ஆன்ட்ரியாஸ் கவுஸ், நெட்ராவால்கர் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்படுகிறார்கள். முடிந்த அளவுக்கு தென்ஆப்பிரிக்காவுக்கு கடும் நெருக்கடி கொடுக்க முயற்சிப்பார்கள். என்றாலும் தற்போதைய நிலைமையில் தென்ஆப்பிரிக்காவின் கை ஓங்குவதற்கே அதிக வாய்ப்புள்ளது. இவ்விரு அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் மோதுவது இதுவே முதல் முறையாகும்.
இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ்
இதே நாளில் வெஸ்ட் இண்டீஸ் - நடப்பு சாம்பியன் இங்கிலாந்து இடையிலான ஆட்டம் செயின்ட் லூசியாவில் உள்ளூர் நேரப்படி இரவில் தொடங்குகிறது. ஆனால் இந்திய நேரப்படி இந்த ஆட்டம் மறுநாள் (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு தான் தெரியும். இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.