சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் சாம் கரன்... தொடர் நாயகன் விருதை வென்ற பின் கூறியது என்ன?
ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் தனக்கு மிகவும் உதவியாக இருந்ததாக தொடர் நாயகன் விருதை வென்ற சாம் கரன் கூறினார்.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் தொடங்கிய 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நிறைவடைந்தது.
இன்று நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக 20-ஓவர் உலகக் கோப்பையை வென்றுள்ளது.
இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட சாம் கரன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசி 13 விக்கெட்களை வீழ்த்திய சாம் கரன் "தொடர் நாயகன்" விருதையும் தட்டி சென்றார்.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் மற்றும் அங்கிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் தனக்கு மிகவும் உதவியாக இருந்ததாக சாம் கரன் கூறினார்.
இது குறித்து சாம் கரன் கூறியதாவது:-
நான் அங்கு(ஐபிஎல்) இருந்த நாட்களை நேசித்தேன். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இத்தகைய பெரிய தொடர்கள்(உலகக்கோப்பை), பல போட்டிகளில் விளையாடிய வீரர்களிடம் இருந்து கற்றுக்கொண்டது அற்புதமான தருணம்.
நான் எப்பொழுதும் கற்றுக்கொள்கிறேன், என்னை மேம்படுத்தவும் முயற்சிக்கிறேன். ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் விளையாட வருவேன் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக சாம் கரன் கூறினார்.
ஐ.பி.எல். போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சாம் கரன் விளையாடியுள்ளார்.அவர் 2020 மற்றும் 2021 ஆகிய 2 ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.
இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். ஏலத்தில் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக பங்கேற்கவில்லை. அதனால் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் அவர் எந்த அணிக்காகவும் விளையாடவில்லை.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சாம் கரன் 23 போட்டிகளில் விளையாடியுள்ளார்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.