ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்; ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகும் முஸ்தாபிசுர்...வெளியான தகவல்
கெய்க்வாட் தலைமையில் களம் இறங்கி ஆடி வரும் சென்னை அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி கண்டுள்ளது.
டாக்கா,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த தொடரில் கெய்க்வாட் தலைமையில் களம் இறங்கி ஆடி வரும் சென்னை அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி கண்டு புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
சென்னை அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 19ம் தேதி லக்னோவை எதிர்கொள்கிறது. இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக வங்காளதேசம் தங்களுடைய சொந்த மண்ணில் ஜிம்பாப்பே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
வரும் மே 3ம் தேதி துவங்கும் அந்த தொடருக்கான வங்கதேச அணியில் முஸ்தாபிசுர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் முழுமையாக ஐ.பி.எல் தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் எப்போது வேண்டுமானும் சொந்த நாட்டிற்கு திரும்பலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், சி.எஸ்.கே நிர்வாகம் மற்றும் பி.சி.சி.ஐ கேட்டுக் கொண்டுள்ளதால் அவரை மே 1-ம் தேதி வரை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிப்பதாக வங்கதேச வாரியம் அறிவித்துள்ளது. இது பற்றி அந்நாட்டு வாரியத்தின் துணை மேனேஜர் ஷாரியர் நபீஸ் கூறியதாவது,
வரும் 30ம் தேதி வரை ஐ.பி.எல் தொடரில் விளையாடிவிட்டு நாடு திரும்பவுமாறு முஸ்தாபிசுர் ரஹ்மானிடம் நாங்கள் தெரிவித்திருந்தோம். ஆனால் சென்னை அணிக்கு மே ஒன்றாம் தேதி போட்டி இருக்கிறது. எனவே சென்னை மற்றும் பிசிசிஐ நிர்வாகங்களின் கோரிக்கையை ஏற்று நாங்கள் அவருடைய விடுப்பை மே ஒன்றாம் தேதி வரை நீட்டிப்பு செய்கிறோம் என்று கூறினார்.
இதன் காரணமாக மே 1ம் தேதி நடைபெறும் சென்னை - பஞ்சாப் அணிகள் இடையிலான ஆட்டம் வரை முஸ்தாபிசுர் ரஹ்மான் விளையாடுவார் என்பது உறுதியாகி உள்ளது.