டி20 கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் தொடக்க ஜோடி வரலாற்று சாதனை


டி20 கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் தொடக்க ஜோடி வரலாற்று சாதனை
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஜோடி 118 ரன்கள் சேர்த்தது.

கிங்ஸ்டவுன்,

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய நேரப்படி நேற்று காலை நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் வெறும் 149 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன குர்பாஸ் - இப்ராஹிம் ஜோடி 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. அந்த அணியில் அதிகபட்சமாக இப்ராஹிம் ஜாட்ரான் 51, ரஹ்மனுல்லா குர்பாஸ் 60 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் திணறியது. அந்த வகையில் 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 127 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை பதிவு செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக குல்பாடின் நைப் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இப்ராஹிம் - குர்பாஸ் ஜோடி வரலாற்று சாதனை:-

இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் குர்பாசும், இப்ராகிம் ஜட்ரனும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் திரட்டினர். ஏற்கனவே நடப்பு தொடரில் உகாண்டா (154 ரன்) மற்றும் நியூசிலாந்துக்கு (103 ரன்) எதிராகவும் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை மட்டுமின்றி, டி20 தொடர்களிலும் 3 முறை செஞ்சுரி பார்ட்னர்ஷிப் உருவாக்கிய ஒரே ஜோடி என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளனர்.


Next Story