சூர்ய பிரகாஷ் அதிரடி: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி
சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றிபெற்றது.
திண்டுக்கல்,
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும்சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்கவிருந்த இந்த போட்டி மழையால் தாமதம் ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து மழை நின்றபின் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது.
சேலம் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்திருந்தபோது, திடீரென மீண்டும் மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. ஆத்னன் கான் 10 ரன்களுடனும், அபிஷேக் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மழையின் காரணமாக இந்த போட்டி இரண்டாவது முறையாக தடைபட்டது.
மழையின் தாக்கம் குறைந்ததும் போட்டி 16 ஒவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியது. ஒவர்கள் குறைக்கப்பட்டதால் நெல்லை அணிக்கு 129 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணியின் சார்பில் ஸ்ரீ நிரஞ்சன் மற்றும் அருண் கார்த்திக் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.
இந்த ஜோடியில் அருண் கார்த்திக் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ஸ்ரீநிரஞ்சன் 14 (17) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்ததாக அஜிதேஷ் குருசாமியுடன், ரித்திக் ஈஸ்வரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடியாக ஆடிய அஜிதேஷ் 39 (31) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ரித்திக் ஈஸ்வரன் 18 (18) ரன்களும், சோனு யாதவ் 8 (4) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சூர்யபிரகாஷ் அதிரடியில் மிரட்டினார்.
இறுதியில் சுகேந்திரன் 11 (9) ரன்களும், சூர்யபிரகாஷ் 14 பந்துகளில் 3 சிக்சர்கள் , 2 பவுண்டரிகளுடன் 33 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் நெல்லை அணி 15.4 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்தது. சேலம் அணியின் சார்பில் அதிகபட்சமாக அபிஷேக் தன்வார் 2 விக்கெட்டுகளும், கணேஷ் மூர்த்தி, ஆகாஷ் சும்ரா மற்றும் சச்சின் ரதி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன்மூலம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றிபெற்றது