சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் குறித்து விமர்சித்த ஆஸ்திரேலிய ஊடகத்தை விளாசிய கவாஸ்கர்


சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் குறித்து விமர்சித்த ஆஸ்திரேலிய ஊடகத்தை விளாசிய கவாஸ்கர்
x

டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று சந்தேகத்தை கிளப்பும் வகையில் செய்தி வெளியிட்டு இருந்தது.

மும்பை,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

அதன்படி நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்தது. இதில் இந்தியா நிர்ணயித்த 177 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்கா ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுக்கு 151 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது. அப்போது அந்த அணிக்கு 24 பந்தில் 26 ரன் மட்டுமே தேவையாக இருந்தது.

ஆனால் ஹென்ரிச் கிளாசெனின் (5 சிக்சர், 2 பவுண்டரியுடன் 52 ரன்) விக்கெட்டை பாண்ட்யா கழற்றியது, 18-வது ஓவரில் பும்ரா ஒரு விக்கெட் எடுத்து 2 ரன் மட்டுமே வழங்கி மிரட்டியது, இறுதி ஓவரின் முதல் பந்தில் டேவிட் மில்லர் (21 ரன்) தூக்கியடித்த பந்தை எல்லைக்கோடு அருகே மிக லாகவமாக சூர்யகுமார் பிடித்தது இப்படி திக்...திக்...திக் திருப்பங்களுடன் ஆட்டமும் இந்தியா பக்கம் சாய்ந்தது. 20 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுக்கு 169 ரன்னில் அடங்கி கோப்பையை கோட்டை விட்டது. சூர்யகுமார் யாதவ் பிடித்த அந்த கேட்ச் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதனால் சூர்யகுமார் பிடித்தது கேட்ச் அல்ல உலகக்கோப்பை என்று இந்திய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகின்றனர். ஆனால் சில ரசிகர்கள் அது கேட்ச் கிடையாது என்றும்,அது சிக்சர் என்றும் சமூக வலைதளங்களில் குறை கூறி வந்தனர்.

டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்து இரு வார காலமாகியும் இந்த கேட்ச் மீதான சர்ச்சை ஒயவில்லை. இந்த கேட்ச் குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று சந்தேகத்தை கிளப்பும் வகையில் செய்தி வெளியிட்டு இருந்தது. அதை சுட்டிக்காட்டிய இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ஆஸ்திரேலிய அணிதான் ஏமாற்று அணி, அந்த அணியின் ஏமாற்று வேலை செய்யும் வீடியோவை பார்த்துவிட்டு வந்து சூர்யகுமார் யாதவ் நோக்கி கை காட்டி விமர்சனம் செய்யுங்கள் என கடுமையாக விளாசி இருக்கிறார்.

இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், "இறுதிப் போட்டியில் டேவிட் மில்லரின் கேட்ச்சை சூர்யகுமார் பிடித்தது சரியானது தானா? என ஆஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அந்த கேட்ச் குறித்த அனைத்து வீடியோக்களிலும் சூர்யகுமார் யாதவ் தன்னை அற்புதமாக நிலை நிறுத்திக் கொண்டு பந்தை பிடிப்பது தெரிகிறது. அவர் பந்தை பிடித்து பின்பு மீண்டும் மேலே தூக்கிப்போட்டு, பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்று விட்டு, பின் மீண்டும் உள்ளே வந்து பந்தை கேட்ச் பிடித்து அதை நிறைவு செய்தார்.

அந்த கேட்ச் பற்றி யாருமே கேள்வி எழுப்பவில்லை. ஆனால், அந்த செய்தியை எழுதிய செய்தியாளர் மட்டும் கேள்வி எழுப்புகிறார். ஒருவேளை அவர் ஆஸ்திரேலிய அணி செய்த பத்து அப்பட்டமான ஏமாற்று வேலைகள் என்ற வீடியோவை பார்க்க விரும்பலாம். அதை பார்த்த பின்பு சூர்யகுமார் யாதவை நோக்கி உங்கள் விரல்களை நீங்கள் காட்டலாம். ஒரு சட்டி அதன் மூடியை பார்த்து நீ கருப்பாக இருக்கிறாய் என்றதாம். அது போலத்தான் இருக்கிறது இது." என்று கடுமையாக விளாசியுள்ளார் சுனில் கவாஸ்கர்.


Next Story