சிறப்பான திறமை இருந்தும் அதற்கு தகுந்தாற்போல் சுப்மன் கில் செயல்படவில்லை - பாக். முன்னாள் வீரர்
உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் அனைத்து பந்துகளையும் விருப்பத்திற்கு ஏற்ப விளையாட கூடாது என்பதை கில் உணர வேண்டும்.
கராச்சி,
இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில். கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து நல்ல பார்மில் இருக்கும் கில், விராட் கோலிக்கு பின் இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சில ரசிகர்களால் பாராட்டப்படுகிறார்.
இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்துவதற்கு நிகராக அவர் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இன்னும் சாதிக்கவில்லை என்றே சொல்லலாம். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அவர் தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறார். அதிலும் 2023 பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிராக அடித்த 126 ரன்களை கழித்தால் டி20 கிரிக்கெட்டில் அவருடைய புள்ளிவிவரம் இன்னும் படுமோசமாக இருக்கிறது.
இந்நிலையில் சிறப்பான திறமை இருந்தும் அதற்கு தகுந்தாற்போல் கில் செயல்படவில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "கடந்த சில ஆட்டங்களில் சுப்மன் கில் தன்னுடைய திறமைக்கு அநீதி இழைத்து விட்டார் என்று நினைக்கிறேன். சிறந்த வீரரான அவர் தேவையான அளவு திறமையை கொண்டுள்ளார். இருப்பினும் பெரும்பாலான போட்டிகளில் 20+ ரன்கள் எடுக்கும் அவர் பின்னர் சுமாரான ஷாட்டை அடிக்கிறார்.
ஆனால் கடந்த வருடம் வெற்றிகரமாக செயல்பட்டபோது அவர் இப்படி பேட்டிங் செய்யவில்லை. என்னை கேட்டால் அவர் எதையும் ஸ்பெஷலாக முயற்சிக்காமல் தன்னுடைய திறமைக்கு சாதாரணமாக விளையாடினாலேபோதும். குறிப்பாக உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் அனைத்து பந்துகளையும் விருப்பத்திற்கு ஏற்ப விளையாட கூடாது என்பதை அவர் உணர வேண்டும். நீங்கள் இப்படித்தான் விளையாட வேண்டும் என்று விளையாடாமல் பந்தை பார்த்து அதற்கு தகுந்தாற்போல் விளையாட வேண்டும்" என்றார்.