ஸ்மிருதி மந்தனா அபார சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு 266 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்துள்ளது
பெங்களூரு,
தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி, இந்திய மகளிர் அணியின் ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக இறங்கினர். ஷபாலி வர்மா 7 ரன்கள் , தயாளன் ஹேமலதா 17 ரன்கள் , ஹர்மன்பிரீத் கவுர் 12 ரன்கள் , ஜெமிமா ரோட்ரிக்ஸ் 17 ரன்கள் எடுத்து விரைவில் வெளியேறினர்.
.ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். தீப்தி ஷர்மா அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார். 6-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 81 ரன்கள் சேர்த்தது. தீப்தி ஷர்மா 37 ரன்னிலும், ஸ்மிருதி மந்தனா 117 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.