டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மெதுவான அரைசதம் - மோசமான சாதனை படைத்த ரிஸ்வான்
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் மோதின.
நியூயார்க்,
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கனடா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. கனடா தரப்பில் அதிகபட்சமாக ஆரோன் ஜான்சன் 52 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது அமீர், ஹாரிஸ் ராப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் புகுந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சைம் அயூப் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அயூப் 6 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து கேப்டன் பாபர் அசாம் களம் புகுந்தார். பாபர் - ரிஸ்வான் இருவரும் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இதில் பாபர் அசாம் 33 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய பக்கார் ஜமான் 4 ரன்னில் அவுட் ஆனார்.
மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய முகமது ரிஸ்வான் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 107 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரிஸ்வான் 53 ரன்கள் எடுத்தார். கனடா தரப்பில் தில்லன் ஹெய்லிகர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அரைசதம் அடிக்க 52 பந்துகளை எடுத்து கொண்டார். இதன் மூலம் அவர் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மெதுவான அரைசதம் (பந்துகள் அடிப்படையில்) அடித்த வீரர் என்ற மோசமான சாதனையை ரிஸ்வான் (52 பந்துகள்) படைத்துள்ளார். இதற்கு முன் இந்த பட்டியலில் டேவிட் மில்லர் (50 பந்துகள் - நெதர்லாந்துக்கு எதிராக, 2024) முதல் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பையில் மெதுவான அரைசதம் (பந்துகள் அடிப்படையில்):
முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) - 52 பந்துகள் (கனடாவிற்கு எதிராக) - 2024
டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா) - 50 பந்துகள் (நெதர்லாந்துக்கு எதிராக) - 2024
டெவான் ஸ்மித் (வெஸ்ட் இண்டீஸ்) - 49 பந்துகள் (வங்காளதேசத்திற்கு எதிராக) - 2007
டேவிட் ஹஸ்ஸி (ஆஸ்திரேலியா) - 49 பந்துகள் (இங்கிலாந்துக்கு எதிராக) - 2010