சிறந்த பீல்டருக்கான தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய ஸ்ரேயாஸ் ஐயர்..!
உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
மும்பை,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் நிசாங்கா, கருணாரத்னே இருவரும் ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 7வது வெற்றியை பதிவு செய்த இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி நேற்றைய ஆட்டத்தில் சிறந்த பீல்டராக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பேட்டிங் மட்டுமின்றி பீல்டிங்கிலும் அபாரமாக செயல்பட்ட ஐயர் இலங்கை வீரர்கள் சமரவிக்ரம, தில்ஷான் மதுஷங்கா ஆகியோரின் கேட்சை பிடித்தார். இதன் மூலம் அவர் சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முந்தைய ஆட்டத்தில் சிறந்த பீல்டர் விருது பெற்ற ராகுல் தங்கப்பதக்கம் அணிவித்து கவுரவித்தார்.