டி20 உலகக்கோப்பை: தொடர் நாயகன் விருதுக்கான வீரர்கள் பட்டியல் வெளியீடு- ரசிகர்களே தேர்ந்தெடுக்க ஏற்பாடு
ஐசிசி பரிந்துரைத்துள்ள வீரர்களில் யார் அதிக வாக்குகளை பெறுகிறார்களோ அந்த வீரர் ஐசிசி தொடர் நாயகன் விருதை வெல்வார்.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையின் இறுதி போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது. மெல்போர்ன் மைதானத்தில் நடக்க உள்ள இந்த போட்டியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் நடப்பு டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் பட்டியல் ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஐசிசி பரிந்துரைத்துள்ள வீரர்களிள் யார் அதிக வாக்குகளை பெறுகிறார்களோ அந்த வீரர் ஐசிசி தொடர் நாயகன் விருது வெல்வார்.
அந்த வகையில் ஐசிசி தொடர்நாயகன் விருதுக்கு ஐந்து நாடுகளில் இருந்து 9 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக இங்கிலாந்தில் இருந்து மூன்று வீரர்களும், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து தலா இரண்டு வீரர்களும், இலங்கையில் இருந்து தலா ஒரு வீரரும் , ஜிம்பாப்வேவிலிருந்து ஒரு வீரரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்துள்ள விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தான் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் சதாப் கான், ஷாகின் ஆப்ரிடி, இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஷாம் கரண், கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹெல்ஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களை தவிர ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா, இலங்கை வீரர் ஹசரங்கா ஆகியோரும் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். ஐசிசி-யின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று ரசிகர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம். இறுதி போட்டி முடிந்த பிறகு சாம்பியன் கோப்பை வழங்குவதற்கு முன்னதாக இதன் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.