இந்திய அணி தோல்வி அடைந்ததை நான் பொருட்படுத்தவில்லை ஆனால்... - சசிதரூர் டுவீட்
காங்கிரஸ் எம்.பி சசிதரூர் இந்திய அணியின் அரையிறுதி தோல்வி குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அடிலெய்டு,
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் இன்று அடிலெய்டு ஓவலில் நடந்த 2-வது அரைஇறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 63 ரன்களும் கோலி 50 ரன்களும் எடுத்தனர்.
இதை தொடர்ந்து 169 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களின் அதிரடியால் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் இந்திய அணியின் இந்த தோல்வி குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், "இந்தியா தோல்வி அடைந்ததை நான் பொருட்படுத்தவில்லை. வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதி. ஆனால் இந்திய அணி வெற்றிக்காக போராடாமல் எளிதில் வீழ்ந்ததை நான் பொருட்படுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார். சசி தரூர் இங்கிலாந்தின் லண்டனில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.