"விராட் கோலி இப்போதே ஓய்வு பெறவேண்டும்" சாகித் அப்ரிடி கருத்துக்கு கண்டனம்


விராட் கோலி இப்போதே ஓய்வு பெறவேண்டும் சாகித் அப்ரிடி கருத்துக்கு கண்டனம்
x

File Photo

"விராட் கோலி இப்போதே ஓய்வு பெறவேண்டும்" என்ற பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி கருத்துக்கு இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

மும்பை

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் வீழ்ந்த நிலையில், அடுத்த போட்டியில் இலங்கையிடமும் வீழ்ந்தது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதமடிக்க ஆப்கானிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. எனினும் பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம் இந்தியா தோல்வியைத் தழுவியதால் இந்த தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது.

அதேநேரம் ஆசிய கோப்பையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த தொடரில் விராட் கோலி இரண்டு அரை சதங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 122 ரன்கள் எடுத்து தான் மீண்டும் பார்முக்கு திரும்பியதை அறிவித்துள்ளார்.கோலி 5 போட்டிகளில் 92 சராசரி மற்றும் 147.59 ஸ்ட்ரைக் ரேட்டில் 286 ரன்கள் எடுத்தார்.

விராட் கோலியின் இந்த ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு மிகவும் தேவையாக இருந்தது. இதைத் தொடர்ந்து பல முன்னணி வீரர்களும், முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் விராட் கோலிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விராட் கோலி பார்மில் இருக்கும்போதே ஓய்வு பெறவேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாகித் அப்ரிடி கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனியார்தொலலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறி இருப்பதாவது:-

விராட் கோலி பார்மில் இல்லாத போது அணியில் இருந்து நீக்கப்பட்டால் அது நன்றாக இருக்காது. நீங்கள் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே அது நிகழ வேண்டும். ஆசியாவைச் சேர்ந்த மிகச் சிலரே அந்த முடிவை எடுக்கின்றனர். விராட் அப்படிச் செய்யும் போது அவர் அதை ஸ்டைல் ஆக செய்வார், அனேகமாக அவர் தனது கிரிக்கெட் வாழ்கையை தொடங்கிய அதே முறையில் செய்வார். என்று உணர்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

ஆனால் அப்ரிடியின் கருத்துகள் இந்திய ரசிகர்களால் விமர்சிக்கபட்டு வருகிறது. இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா அன்புள்ள அஃப்ரிடி, சிலர் ஒரு முறை மட்டுமே ஓய்வு பெறுகிறார்கள், எனவே தயவு செய்து விராட் கோலியை இதிலிருந்து காப்பாற்றுங்கள்" என்று டுவீட் செய்து உள்ளார். மிஸ்ரா 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் முறையே 76, 64 மற்றும் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அப்ரிடி தனது வாழ்க்கையில் பலமுறை ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது முதல் டெஸ்ட் ஓய்வு 2006 ஆம் ஆண்டு இரண்டு வாரங்களில் திரும்ப எடுக்கப்பட்டது.

2010 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டெஸ்டில் பாகிஸ்தானுக்கு கேப்டனாக இருந்த பிறகு அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

2011 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு கேப்டனாக இருந்த அப்ரிடி, அதன்பிறகு பிறகு அனைத்து வகையான விளையாட்டுகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார், ஆனால் மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வற்புறுத்தலின் பேரில் அதை திரும்பப் பெற்றார். அவர் 2015 ஒருநாள் உலகக் கோப்பையில் அணியை வழிநடத்தினார், பின்னர் இறுதியாக 2017 இல் அனைத்து வகையான ஆட்டங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக் அறிவித்தார்.


Next Story