எஸ்.ஏ.20 ஓவர் லீக்; எம்.ஐ. கேப்டவுன் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - பிரிட்டோரியா கேப்பிடஸ் அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
க்கெபெர்ஹா,
தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) தொடரின் 2வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் எம்.ஐ. கேப்டவுன் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் அபெல் 60 ரன், மார்க்ரம் 54 ரன் எடுத்தனர். கேப்டவுன் அணி தரப்பில் துஷாரா, ரபாடா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கேப்டவுன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 4 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் திரில் வெற்றி பெற்றது.
கேப்டவுன் அணி தரப்பில் அதிகபட்சமாக சாம் கர்ரன், பொல்லார்ட் ஆகியோர் தலா 30 ரன்கள் எடுத்தனர். ஈஸ்டர்ன் கேப் தரப்பில் ஒட்னியல் பார்ட்மேன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - பிரிட்டோரியா கேப்பிடஸ் அணிகள் மோதின. இதில் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணி 4.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்திருந்த போது போது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் முடித்துகொள்ளப்பட்டது.