எஸ்.ஏ.20 ஓவர் லீக்; டர்பன் சூப்பர் ஜெய்ன்ட்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


எஸ்.ஏ.20 ஓவர் லீக்; டர்பன் சூப்பர் ஜெய்ன்ட்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x

image courtesy; twitter/@SA20_League

2-வது குவாலிபையர் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி டர்பன் சூப்பர் ஜெய்ன்ட்ஸ் வெற்றி பெற்றது.

ஜோகன்ஸ்பர்க்,

தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) தொடரின் 2வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 10ம் தேதி தொடங்கிய இந்த தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. லீக் சுற்று முடிவில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், டர்பன் சூப்பர் ஜெய்ன்ட்ஸ், பார்ல் ராயல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

இதில் முதலில் நடைபெற்ற முதல் குவாலிபையர் ஆட்டத்தில் டர்பன் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தோல்வி அடைந்த டர்பன் அணி 2வது குவாலிபையர் ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.

இதையடுத்து நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 2-வது குவாலிபையருக்கு முன்னேறியது.

இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2-வது குவாலிபையர் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல் குவாலிபையரில் தோல்வி அடைந்த டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சூப்பர் ஜெயன்ட்ஸ், கிளாசென் மற்றும் வியான் முல்டர் ஆகியோரின் அரைசத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 211 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளாசென் 74 ரன்கள் குவித்தார். சூப்பர் கிங்ஸ் தரப்பில் அதிகபட்சமாக பர்கர் மற்றும் பிரேஸ்வெல் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 212 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், டர்பன் அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வெறும் 17.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 142 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 27 ரன்கள் அடித்தார். டர்பன் அணி தரப்பில் அதிகபட்சமாக ஜூனியர் டலா 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

இந்த தொடரில் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.


Next Story